மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக ஆதரவு- தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக ஆதரிப்பதாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது.
அதேபோல, மாநிலங்களவையில் வியாழக்கிழமை அன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பதால், மசோதா நிறைவேறுவது உறுதியாகி உள்ளது.
இதற்கிடையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளதாவது; மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திமுக ஆதரிக்கிறது. இருப்பினும், மசோதாவின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக பார்க்க வேண்டும்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு உரிமை மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் தமிழ்நாடு முன்னுரிமை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.