நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை தருவதாக திமுக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

Update: 2023-08-10 07:56 GMT

புதுடெல்லி,

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 3வது நாளாக மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார்.

அப்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம் என நிர்மலா சீதாராமன் கூறினார். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால் கட்டுமானம் தாமதமாகியுள்ளது என்றும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மீண்டும் மீண்டும் தவறான தகவல்களை கொடுக்கவேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்டிக்கொடுப்பதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை இல்லை என்று பேசிய நிர்மலா சீதாராமன், ஜப்பான் நிறுவனத்தின் கடன் மூலம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக கட்டப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை தருவதாக திமுக எம்.பி.க்கள் புகார் தெரிவித்தனர். அத்துடன், மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுவதை அடுத்து, மக்களவையில் இருந்து காங்கிரஸ், என்சிபி, திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்