குடகில் 7-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு
குடகு மாவட்டத்தில் 7-ம் நூற்றாண்டுகள் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் ஆய்விற்காக தொல்லியல்துைற அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.;
குடகு-
குடகு மாவட்டத்தில் 7-ம் நூற்றாண்டுகள் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் ஆய்விற்காக தொல்லியல்துைற அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டுகள்
குடகு மாவட்டம் சோமவார்பேட்டை, குஷால்நகர், மடிகேரி தாலுகாக்களில் பழங்காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் அதிகளவு இருப்பதாக தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பழங்கால கல்வெட்டுகள் இருந்தது தெரியவந்தது. மேலும் சில கல்வெட்டுகள் மண்ணில் புதைந்து இருந்தது.
அதையும் அதிகாரிகள் தோண்டி எடுத்து ஆய்வு செய்தனா். அதன்படி சோமவார்பேட்டையில் 34, குஷால்நகரில் 18, மடிகேரியில் 17 கல்வெட்டுகள் கிடைத்தன. இந்த கல்வெட்டுகள் அனைத்தும் 7-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையிலானவை என்று கூறப்படுகிறது. இந்த கல்வெட்டுகள் அனைத்தும் ஆய்விற்காக தொல்லியல்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோவில்கள்
இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரி ரேகா என்பவர் கூறியதாவது:-
குடகு மாவட்டத்தில் உள்ள சோமவார்பேட்டை, குஷால்நகர், மடிகேரி ஆகிய 3 தாலுகாக்களிலும் சேர்த்து மொத்தம் 406 கிராமங்களில் இந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளோம். இங்கு பல்வேறு கல்வெட்டுகள், நினைவு சின்னங்கள், நடுகல், சிலைகள், பாறைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக சோமவார்பேட்டை மோரிகல்லு கிராமத்தில் 5 பழங்கால கல்லறைகள் கண்டறியப்பட்டு உள்ளது.
மடிகேரி தாலுகாவில் 175 நினைவுச் சின்னங்கள், காண்டூர், ஐகோலா, அரண்மனைகள், காகோடு மகா விஷ்ணு கோவில், குண்டச்சேரி ஈஸ்வரன் கோவில், சிங்கத்தூர் மகா விஷ்ணு கோவில், பாவாலி துர்கா பகவதி கோவில், குய்யங்கேரி விஷ்ணு கோவில்கள் இருந்ததற்கான அடையாளங்கள் கல்வெட்டுகள் வாயிலாக கிடைத்துள்ளன. குடகில் இறந்தவர்களின் நினைவாக நடப்பட்ட கற்கள் அதிகளவு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்டது
அதன்படி சோமவார்பேட்டையில் 246 நடுகல், குஷால்நகரில் 21 நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இதனுடன் 12 வீரக்கற்கள், 11 சமுதாய சின்னங்கள், 5 பாறைச்சிற்பங்களும் கிடைத்தன. இதேபோல பழங்காலத்தை சேர்ந்த 69 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
7-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் என்பதால், எந்த மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.