சிரியா சரக்கு கப்பலில் இருந்து டீசல் கசிவு; கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம்

மங்களூரு அருகே நடுக்கடலில் மூழ்கிய சிரியா சரக்கு கப்பலில் இருந்து டீசல் கசிய தொடங்கியுள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-29 23:54 GMT

மங்களூரு,

மலேசியா நாட்டில் இருந்து 8 ஆயிரம் டன் இரும்பு சரக்குகளுடன் `எம்.வி.பிரின்ஸ்' என்ற சிரியா நாட்டு சரக்கு கப்பல் லெபனான் நாட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. மேலும் கப்பலில் எரிெபாருளுக்கு தேவையான 220 டன் டீசல் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.

இந்த சரக்கு கப்பலில் சிரியா நாட்டை சேர்ந்த 15 மாலுமிகள் பயணித்து வந்தனர். இந்த கப்பல் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புதிய துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் சென்றபோது திடீரென பழுதாகிநின்றது.

இதனால் கப்பலில் விரிசல் ஏற்பட்டு கடல்நீர் உள்ளே புகுந்தது. இதனால் அந்த சரக்கு கப்பலில் மேற்கொண்டு பயணிக்க முடியாத நிலை உருவானது. கப்பலில் இருந்த 15 மாலுமிகளும் சிக்கி தவித்தனர். இதுபற்றி மங்களூரு புதிய துறைமுக அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடந்த விபத்து பற்றி கூறி உள்ளே நுழைய அனுமதி கேட்டனர். ஆனால் துறைமுக அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் தகவலின் பேரில் கடலோர காவல் படையினர் 2 மீட்பு கப்பலில் சென்று 15 மாலுமிகளையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து காப்பகத்தில் சேர்த்தனர். சரக்கு கப்பலை மீட்கவில்லை.

இதனால் சரக்கு கப்பல் சிறிது, சிறிதாக மூழ்க தொடங்கியது. இதற்கிடையே மீட்கப்பட்ட 15 மாலுமிகளையும் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் கப்பல் நிறுவனத்தின் சார்பில் சரக்குகளுடன் கப்பலை மீ்ட்க நடவடிக்கை எடுத்து வந்தது.

இதையடுத்து சரக்கு கப்பலில் இருந்து டீசல் கசிவை தடுக்க கடலோர காவல் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி ெஹலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் கண்காணித்து வந்தனர். இதற்காக போர்ப்பந்தரில் இருந்து மாசுக்கட்டுபாட்டு கப்பலான ஐ.சி.ஜி.எஸ். என்ற சமுத்ரா பவக் கப்பலும் வரவழைக்கப்பட்டு கடலில் மூழ்கிய கப்பலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.

இதனால் கடந்த 25-ந்தேதி மதியம் கப்பல் முழுமையாக கடலில் மூழ்கியது. கப்பலில் எடுத்துவரப்பட்ட 8 ஆயிரம் டன் இரும்புகளும் கடலில் மூழ்கின. ஆனாலும் அந்த கப்பலில் இருந்த 220 டன் டீசல் கசிவை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் முதல் சிரியா நாட்டு சரக்கு கப்பலில் இருந்து டீசல் கசிவு ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால் கப்பல் மூழ்கிய பகுதியை சுற்றிய கடல் நீரில் எண்ணெய் படலம் மிதக்கிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்த கடலோர காவல்படை அதிகாரிகள் கடலுக்குள் சென்று பார்வையிட்டனர். இதைதொடர்ந்து மேற்கொண்டு டீசல் கசிவதை தடுக்கவும், கடலில் கசிந்துள்ள டீசல் படலத்தை அகற்றவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் எதிரொலியால் மங்களூரு புதிய துறைமுகத்தில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடைவிதித்து கடலோர காவல் படையினர் உத்தரவிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்