மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் சாவு

பெங்களூருவில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான பரிதாபம் நடந்துள்ளது. அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக்கூறி குடும்பத்தினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-23 21:32 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான பரிதாபம் நடந்துள்ளது. அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக்கூறி குடும்பத்தினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டிரான்ஸ்பார்மரில் தீ

பெங்களூரு சுங்கதகட்டே பகுதியில் வசித்து வந்தவர் கவுதம் (வயது 26). இவரது சொந்த ஊர் ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா ஆகும். பெங்களூருவில் பெஸ்காமில் (மின்வாரியம்) ஊழியராக கவுதம் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 9 மணியளவில் மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோபாலபுரம் போலீஸ் சவுக் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்தது. இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி மாகடி ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே டிரான்ஸ்பார்மரில் பிடித்து எரிந்த தீயை அணைக்க, கவுதம் உள்பட 2 பேரை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கோபாலபுரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி தீயை அணைப்பதற்காக கவுதம் முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

மின்வாரிய ஊழியர் சாவு

உயிருக்கு போராடிய கவுதமை அங்கிருந்தவர்கள் மீட்டு ராஜாஜிநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவுதம் பரிதாபமாக இறந்துவிட்டார். தகவல் அறிந்ததும் மாகடி ரோடு போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். பின்னர் கவுதம் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு கவுதமின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதார்கள். போலீஸ் விசாரணையில், டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்திருப்பது பற்றி அறிந்ததும் கவுதம் உள்பட 2 ஊழியர்கள் அங்கு விரைந்து வந்திருந்தனர். அப்போது அந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் ஒருபுறம் செல்லும் மின்சாரத்தை மட்டும் துண்டித்திருந்தனர். மற்றொரு புறம் செல்லும் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்துள்ளது. இதுபற்றி கவுதமுக்கு தெரியவில்லை.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

இதனால் டிரான்ஸ்பார்மரில் அவர் ஏறியதும், அங்கிருந்த மின் வயரில் அவரது கை பட்டதால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உயிர் இழந்தது தெரியவந்தது. இதற்கிடையில், விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு வந்த மின்வாரிய அதிகாரிகளுடன், கவுதமின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உங்களது அலட்சியம், போதுமான பாதுகாப்பு உபகரணங்களை கவுதமுக்கு வழங்காததால், டிரான்ஸ்பார்மரில் ஏறிய போது மின்சாரம் தாக்கி பலியாகி விட்டதாக அதிகாரிகள் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறினார்கள்.

இதுகுறித்து மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து எரிவது, அதனை சரி செய்ய கவுதம் முயன்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்படும் காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்