பெங்களூருவுக்கு பிரதமர் மோடி வந்தாரா? இல்லை கொரோனா வைரஸ் வந்ததா?
பெங்களூருவுக்கு பிரதமர் மோடி வந்தாரா? இல்லை கொரோனா வைரஸ் வந்ததா? என்று காங்கிரஸ் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று ஒரே நாளில் 26½ கிலோ மீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் சென்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதற்காக நகரின் 34 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. மேலும் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்த கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்காக பொதுமக்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். பெங்களூருவுக்கு பிரதமர் மோடி வந்தாரா? அல்லது கொரோனா வைரஸ் வந்துவிட்டதா? மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பார்க்கும்போது இந்த கேள்வி எழுகிறது. மக்களை வீட்டுக்குள் வைத்துவிட்டு பா.ஜனதா என்ன சாதிக்கப்போகிறதா?. நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழைக்கும் பிரதமர் மோடி, வாழ்க்கையில் ஒரு நாள் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து நாட்டுக்கு சேவை செய்து வருகிறார். அப்படிப்பட்டவர் தற்போது அனைத்து பணிகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு கடந்த ஒரு மாதமாக கர்நாடகத்தில் தங்கி இருப்பது ஏன்? இது வருத்தமாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.