தேவிரம்மா கோவில் திருவிழா தொடங்கியது
தேவிரம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. லட்சக்கணக்கான மக்கள் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். உடுக்கை அடித்தால் கதவு திறக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
சிக்கமகளூரு:
தேவிரம்மன் கோவில்
சிக்கமகளூரு அருகே மல்லேனஹள்ளி பகுதியில் தேவிரம்மன் மலை உள்ளது. இந்த மலையின் உச்சியிலும், அடிவாரத்திலும் தேவிரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு தீபாவளியையொட்டி தேவிரம்மன் கோவிலில் நேற்று திருவிழா தொடங்கியது. நேற்று முதல் வருகிற 27-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. நேற்று காலை மலை அடிவாரத்தில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
லட்சக்கணக்கான மக்கள்
பின்னர் மலை உச்சியில் உள்ள தேவிரம்மன் கோவிலுக்கு சிறப்பு பூஜைகளும், விஷேச அபிஷேகமும் நடந்தது. நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை என்பதால், லட்சக்கணக்கான மக்கள் மலையில் திரண்டனர். செங்குத்தாக செல்லும் மலையில் திரளான மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தேவிரம்மன் மலையில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தான் இருந்தன. பக்தி கோஷங்களை எழுப்பி தேவிரம்மனை தரிசனம் செய்தனர்.
உடுக்கை அடித்தால்...
இந்த கோவிலில் உடுக்கை அடித்தால் கோவில் கதவு திறப்பது சிறப்பம்சம் ஆகும். அந்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தேவிரம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.