மேகதாது விவகாரம்: தமிழ்நாடு எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் மனு போடுகிறது - தேவேகவுடா பேட்டி

மேகதாது விஷயத்தில் தமிழ்நாட்டின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவை இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.;

Update: 2024-03-24 19:35 GMT

பெங்களூரு,

இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுப்போம் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதை நான் கண்டிக்கிறேன்.

கர்நாடகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையில் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அதாவது அணை கட்டுவோம் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும். நாங்களும் எங்களின் அறிக்கையில் இதை சேர்ப்போம்.

இந்த திட்ட விஷயத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையாக போராட வேண்டும். தமிழ்நாட்டின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவை இல்லை. இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது.

தமிழ்நாடு எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் மனு போடுகிறது. அண்டை மாநிலத்துடன் மோதல் போக்குடன் செயல்பட தேவை இல்லை.

இந்த அணை கட்டப்பட்டால் தங்களின் பங்கு நீர் கிடைக்காது என்று தமிழ்நாடு சொல்கிறது. பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்க இந்த அணை கட்டப்பட வேண்டியது அவசியம். மேலும் இந்த அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு முறையாக தண்ணீர் திறக்கப்படும்.

தற்போது பெங்களூருவுக்கு ஆண்டுக்கு 18 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு பெங்களூரு நகரின் மக்கள்தொகை 96 லட்சம் ஆகும். தற்போது அது 1.35 கோடியாக அதிகரித்துள்ளது. வருகிற 2044-ம் ஆண்டு நகரின் மக்கள்தொகை 3 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு குடிநீர் வினியோகம் செய்ய 72.40 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. அதனால்தான் மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது. கடந்த 2018-ம் ஆண்டு திட்ட சாத்தியக்கூறு அறிக்கை மத்திய நீர் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஆணையம் வழங்கிய அனுமதியின் பேரில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. உரிய விதிமுறைகளை பின்பற்றி அந்த அறிக்கையும் கடந்த 2019-ம் ஆண்டு அந்த ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த அறிக்கை கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. புதிய அணையில் 60 டி.எம்.சி. நீர் தேக்கி வைக்கப்படும். பெங்களூரு நகரின் குடிநீர் நோக்கத்திற்கு மட்டுமே இந்த அணை கட்டப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பாசன வசதியை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை. உண்மையில் இந்த திட்டத்தால் தமிழ்நாடும் பயன் பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்