பெங்களூரு புறநகர் மாவட்ட தலைநகர் 'தேவனஹள்ளி'- மந்திரி சுதாகர் அறிவிப்பு
பெங்களூரு புறநகர் மாவட்ட தலைநகர் ‘தேவனஹள்ளி’ என்று மந்திரி சுதாகர் அறிவித்துள்ளார்.
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு புறநகர் மாவட்ட பொறுப்பு மந்திரி சுதாகா் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பெங்களூரு புறநகர் மாவட்டத்திற்கு என்று மாவட்ட தலைநகர் இல்லை. இதுபற்றி மந்திரி சுதாகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து மந்திரி சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு புறநகர் மாவட்டத்திற்கு என்று தனி தலைநகராக 'தேவனஹள்ளி' இருக்கும். தேவனஹள்ளியே பெங்களூரு புறநகர் மாவட்டத்திற்கு பொருத்தமான தாலுகாவாக இருக்கும். அங்கேயே மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைக்கப்படும். பெங்களூரு புறநகர் மாவட்ட தலைநகா் தேவனஹள்ளி தான் என்பது குறித்து இன்னும் ஒரு மாதத்தில் அதிகாரபூர்வமாக அரசு சார்பில் அறிவிக்கப்படும். இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.