புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கர்நாடக துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி திடீர் மரணம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கர்நாடக துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி நேற்று சிகிச்சை பலனின்றி திடீரென மரணம் அடைந்தார். அவரது இறப்புக்கு பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கர்நாடக துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி நேற்று சிகிச்சை பலனின்றி திடீரென மரணம் அடைந்தார். அவரது இறப்புக்கு பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
துணை சபாநாயகர்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் துணை சபாநாயகராக இருந்து வந்தவர் ஆனந்த் மாமணி. இவர், பெலகாவி மாவட்டம் சவதத்தியை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் சவதத்தி எல்லம்மா தொகுதியில், பா.ஜனதா சார்பில் களமிறங்கிய ஆனந்த் மாமணி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வாகி இருந்தார்.
அந்த தொகுதியில் கடந்த 2008, 2013, 2018-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் தொடர்ச்சியாக 3 முறை போட்டியிட்டு ஆனந்த மாமணி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இதையடுத்து, கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சிக்கு வந்த போது துணை சபாநாயகராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனந்த் மாமணி மரணம்
இந்த நிலையில், ஆனந்த் மாமணி புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டார். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் மாமணி, பின்னர் பெங்களூரு பழைய விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணியளவில் துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி மரணம் அடைந்தார். இதை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள். ஆனந்த் மாமணி மரணம் அடைந்திருப்பது பற்றி அறிந்ததும் உடனடியாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றார்.
பசவராஜ் பொம்மை அஞ்சலி
பின்னர் ஆனந்த் மாமணியின் உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அஞ்சலி செலுத்தினார். அத்துடன் அவருடைய குடும்பத்தினருக்கும் பசவராஜ் பொம்மை ஆறுதல் கூறினார். இதையடுத்து, ஆனந்த் மாமணியின் உடல், அவரது சொந்த ஊரான பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா ராமாபுராவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து, சவதத்தியில் உள்ள மைதானத்தில் ஆனந்த் மாமணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் பா.ஜனதாவினர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து, அவரது உடல் சவதத்தி டவுன் பகுதி முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அதன்பிறகு, ராமாபுராவில் உள்ள ஆனந்த் மாமணிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வீரசைவ-லிங்காயத் விதிமுறைகளின்படியும், முழு அரசு மரியாதையுடனும் இறுதி சடங்கு நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் பா.ஜனதா தலைவர்கள் பங்கேற்றார்கள்.
பிரதமர் மோடி இரங்கல்
மரணம் அடைந்த துணை சபாநாயகர் ஆனந்த மாமணியின் மறைவுக்கு பிரதமர் மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக சபாநாயகர் காகேரி, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், சோமண்ணா, அசோக், முருகேஷ் நிரானி, முன்னாள் மந்திரி கே.எஸ்.ஈசவரப்பா, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் ஆனந்த் மாமணியின் மறைவு மிகுந்த வலியை கொடுக்கிறது. கர்நாடகத்தில் பா.ஜனதாவை பலப்படுத்தும் விதமாக உழைத்து வந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ஓம்சாந்தி', என்று கூறியுள்ளார்.
தந்தையும்துணை சபாநாயகர்
பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா ராமாபுராவை சேர்ந்தவர்தான் ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர மல்லிகார்ஜுன். இவரும் தீவிர அரசியலில் இருந்தவர் ஆவார். துணை சபாநாயகராக இருந்துள்ளார். ஆனந்த் மாமணிக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவரது முதல் மனைவி பெயர் ரேகா, 2-வது மனைவி பெயர் ரத்னா. மரணம் அடைந்த ஆனந்த் மாமணிக்கு 56 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெலகாவி மாவட்டத்தில் மந்திரியாக இருந்த உமேஷ் கத்தி கடந்த மாதம் மரணம் அடைந்தார். அதே மாவட்டத்தை சேர்ந்த துணை சபாநாயகராக இருந்த ஆனந்த் மாமணியும் தற்போது உயிர் இழந்துள்ளார். பெலகாவியை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் உயிர் இழந்திருப்பது பா.ஜனதாவுக்கு பெரும் இழப்பு என்று தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.துணை சபாநாயகர் இறந்ததால் கர்நாடகத்தில் அரசு நிகழ்ச்சிகளும், பா.ஜனதா கட்சியின் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 3 நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிட அரசு உத்தரவிட்டுள்ளது.