பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் திட்டத்தால் பஸ்களின் தேவை அதிகரிப்பு- மந்திரி ராமலிங்கரெட்டி பேச்சு
பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் சக்தி திட்டத்தால் பஸ்களின் தேவை அதிகரித்துள்ளதாக போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி கூறியுள்ளார்.
பெங்களூரு:-
விருதுகள் கிடைத்துள்ளன
கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின்(கே.எஸ்.ஆர்.டி.சி.) 62-வது நிறுவன நாள் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கே.எஸ்.ஆர்.டி.சி. நிறுவனம் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவை வழங்குவதில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. இதற்காக 300-க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன. புதிய பஸ்களை வாங்க முடியாத நிலையில் இருந்தபோது பழைய பஸ்களையே புதுப்பித்து மேலும் 5 லட்சம் கிலோ மீட்டர் இயக்கும் அளவுக்கு தயாரிக்கப்பட்டது.
பழைய பஸ்கள்
பெண்களுக்கு இலவச பயணம் வழங்கும் சக்தி திட்டத்தால் பஸ்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போக்குவரத்து அதிகாரிகள் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து அரசுக்கு நற்பெயர் வாங்கி கொடுத்துள்ளனர். இதற்காக அதிகாரிகளை பாராட்டுகிறேன். விபத்து நிவாரண நிதியில் இருந்து 20 ஜீப்புகள் இன்று(நேற்று) சேவையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் மூலம் விபத்துகள் நடைபெறும் பகுதிகளுக்கு விரைந்து சென்று உதவ முடியும். காயம் அடைந்தோரை மீட்டு விரைவாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று காப்பாற்ற முடியும். சேவையில் இருந்தபோது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 510 பழைய பஸ்களுக்கு புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவை புதிய பஸ்களை போல் தோற்றமளிக்கிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு ராமலிங்கரெட்டி பேசினார்.
விழாவில் விபத்து இன்றி பஸ்களை இயக்கிய டிரைவர்களுக்கு விருதும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.