டெல்லியில் வரலாறு காணாத வகையில்... அதிக வெப்பநிலை, மின் தேவை

டெல்லி வரலாற்றில் முதன்முறையாக, 8,302 மெகா வாட் மின்சாரம் தேவையாக இருந்தது என மின் விநியோக நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.;

Update:2024-05-29 20:44 IST

புதுடெல்லி,

நாட்டின் வடமாநிலங்களில் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பநிலையும் பரவலாக அதிகரித்து காணப்படுகிறது. டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்ப அலை பரவல் அதிகரித்து உள்ளது.

வெப்ப அலையால் பல்வேறு இடங்களிலும் உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனால், அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும்படியும், பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

டெல்லியின் வடமேற்கில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் நேற்று 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்நிலையில், டெல்லியில் இன்று வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகி உள்ளது.

இதன்படி, டெல்லியின் முங்கேஷ்வர் பகுதியில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. ராஜஸ்தானில் இருந்து வீசிய வெப்ப காற்றின் விளைவாக, டெல்லியின் புறநகர் பகுதிகளில் இந்த அதிகபட்ச வெப்பம் பதிவாக முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்து விட்டது என வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

இந்த வெப்ப காற்றால், டெல்லியின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு முன்பே, கடுமையான வெப்பநிலை காணப்படும் சூழலில், வெப்ப காற்று வீசினால் நிலைமை மோசமடைய கூடும். இவற்றில், பிற இடங்களை காட்டிலும், முங்கேஷ்பூர், நரேலா மற்றும் நஜாப்கார் ஆகிய பகுதிகள் முதலில் வெப்ப காற்றின் முழு பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது என்று கூறியுள்ளார்.

இதுபற்றி ஸ்கைமெட் வெதர் என்ற தனியார் அமைப்பின் வானிலை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான துணை தலைவர் மகேஷ் பலாவத் கூறும்போது, திறந்த பகுதிகளில் உள்ள காலி நிலத்தில், கதிரியக்கம் அதிகரித்து காணப்படும்.

நேரடி சூரிய வெளிச்சம் மற்றும் போதிய நிழல் இல்லாதது ஆகியவற்றால் இந்த பகுதிகளில் அதிக வெப்பம் ஏற்படும் என கூறியுள்ளார். மேற்கில் இருந்து காற்று வீசும்போது, இந்த பகுதிகள் முதலில் பாதிக்கப்படுகின்றன. அவை புறநகர் பகுதிகளாக உள்ளது. அதனால், வெப்பநிலை விரைவாக உயர்கிறது என்று கூறியுள்ளார்.

டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதிவான உச்சபட்ச வெப்பநிலை இதுவாகும் என அந்த மையத்தின் அதிகாரி கூறியுள்ளார். இதேபோன்று, இதுவரை இல்லாத வகையில், மின்சார தேவையும் டெல்லியில் அதிகரித்து இருந்தது.

இந்த கோடை காலத்தில் 8,200 மெகா வாட் மின்சாரம் தேவையாக இருக்கும் என மின் விநியோக நிறுவனங்கள் மதிப்பீடு செய்திருந்தன. இந்நிலையில், டெல்லி வரலாற்றில் முதன்முறையாக, 8,302 மெகா வாட் மின்சாரம் தேவையாக இருந்தது என மின் விநியோக நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்