டெல்லி; 5-வது மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இந்த வழக்கு தொடர்பாக கட்டிடம் கட்டும் நிறுவனத்தின் உரிமையாளர் ஹரிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-07-31 09:26 GMT

புதுடெல்லி,

பீகார் மாநிலம்  கதிஹார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் ஷா ஆலம். இவருக்கு ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் டெல்லியில் உள்ள ஹரிஷ் என்பவரின் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று மாளவியா நகரில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் சுவர் பூசும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். திடீரென்று நிலை தடுமாறி 5-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவரின் உடலில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் அவர் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி பணியில் ஈடுபட்டு உள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். இதனால் போலீசார் கட்டிடம் கட்டும் நிறுவனத்தின் உரிமையாளரான ஹரிஷ் மீது இந்திய தண்டனை சட்டம் 288 மற்றும் 304ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய எம்எல்ஏ சோம்நாத் பாரதி, 'இது ஒரு சோகமான நிகழ்வு. பீகாரில் இருந்து ஒருவர் வேலைக்காக வந்த இடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை எற்படுத்துகிறது. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததே உயிரிழப்புக்கு காரணம். எனவே இதற்கு காரணமான ஹரிஷிடம் இருந்து ஷேக் ஷா ஆலம் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்று தருவோம்' என கூறியுள்ளார்.

ஷேக் ஷா ஆலம் அடுத்த மாதம் நடைபெறும் தனது மகளின் திருமணத்திற்காக இன்று சொந்த ஊர் செல்ல இருந்ததாக உடன் பணிபுரிந்தவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்