டெல்லி தண்ணீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் - பிரதமருக்கு அதிஷி கடிதம்

தலைநகர் டெல்லியில் தண்ணீர் பிரச்சினை தீர்க்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக அதிஷி தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-19 12:36 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி எதிர்கொண்டு வரும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி டெல்லி மந்திரி அதிஷி பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அடுத்த 2 நாட்களுக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், "டெல்லியின் தண்ணீர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் இதற்கு உரிய தீர்வு காண வேண்டியுள்ளேன். அடுத்த இரண்டு நாட்களுக்குள் இதற்கு தீர்வு இல்லை என்றால் வரும் 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன். நேற்று அரியானா மாநிலம் 513 மில்லியன் கேலன் திறந்து விட்டார்கள். ஆனால், அவர்கள் டெல்லிக்கு தர வேண்டிய பங்கு 613 மில்லியன் கேலன். ஒரு மில்லியன் கேலன் தண்ணீர் 28,500 பேருக்கு தான் கிடைக்கும். அதாவது 28 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கடந்த மே 31-ம் தேதி டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் அண்டை மாநிலங்களான அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கூடுதல் நீரை திறக்க வேண்டும் என ஆம் ஆத்மி அரசு கோரிக்கை வைத்தது. தொடர்ந்து இமாச்சல பிரதேசம் கூடுதல் நீரை திறக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இருந்தும் நீர் இல்லை என்ற இமாச்சல பிரதேச அரசு தெரிவித்தது. டெல்லி நிலைக்கு அரியானா நீர் வழங்காதது தான் காரணம் என ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்