டெல்லியில் பள்ளி மாணவி மீது திராவகம் வீச்சு: மூன்று பேர் கைது

டெல்லியில் பள்ளி மாணவி மீது திராவகம் வீசப்பட்டது. இந்த கொடும் செயலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-12-15 01:30 IST

புதுடெல்லி,

மேற்கு டெல்லியின் உத்தம்நகர் மோகன் கார்டன் பகுதியில் ஒரு 17 வயது பள்ளி மாணவி நேற்று காலை 7.30 மணியளவில் தனது தங்கையுடன் நடந்து சென்றார்.

அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர், சிறுமியின் முகத்தில் திடீரென திராவகத்தை வீசினார். அதில் மாணவி வலியில் அலறித்துடித்தார். அவரது தங்கை அருகே உள்ள தங்கள் வீட்டுக்கு ஓடிச்சென்று தந்தையிடம் தகவல் தெரிவித்தார்.

உடனே அவர் விரைந்து சென்று மகளை சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். திராவக வீச்சில் மாணவிக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. அவரது இரு கண்களும் பாதிக்கப்பட்டன. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

திராவகம் வீசிய இருவரும் முகத்தை துணியால் மூடியிருந்தனர். ஆனால் அவர்கள் யாராக இருக்கக்கூடும் என்ற தகவலை போலீசாரிடம் மாணவி தெரிவித்தார்.

அதன் அடிப்படையிலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் மூலமும், மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்