டெல்லி: குழந்தைகள் பலியான மருத்துவமனையில் சட்டவிரோதமாக ஆக்சிஜன் நிரப்பப்பட்டது கண்டுபிடிப்பு
டெல்லி மருத்துவமனையில் தீவிபத்து சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் சட்டவிரோத ஆக்சிஜன் நிரப்பப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
டெல்லியின் விவேக் விகார் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில், சனிக்கிழமை நள்ளிரவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. 5 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் 6 பச்சிளம் குழந்தைகள் பலியானார்கள். 5 குழந்தைகள் காயம் அடைந்தனர். கடும் போராட்டத்திற்கு பின்பு தீ அணைக்கப்பட்டது.
ஆரம்பத்தில், 7 குழந்தைகள் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனைக்கு பிறகு, தீ விபத்து ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு குழந்தைகளில் ஒன்று இறந்தது கண்டறியப்பட்டது.
நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரம் குறித்து டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சவுரப் பரத்வாஜ், விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் மருத்துவமனையில் 27 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு இருந்ததும், அங்கு ஆக்சிஜன் நிரப்பும் பணி நடந்ததும் தெரியவந்தது.
மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பும் முறை வைத்திருப்பது சட்டவிரோதமாகும். அதேபோல தீயை அணைக்கும் கருவிகள் இல்லாததும், அவசரகால வெளியேற்றங்கள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. 5 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில், 27 சிலிண்டர்கள் ஏன் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.