'சிறுமி 40 முறை குத்திக்கொலை' பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி மாறிவிட்டது - மகளிர் ஆணைய தலைவி

பெண்கள் வாழ பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி மாறிவிட்டது என்று மகளிர் ஆணைய தலைவி கூறியுள்ளார்.

Update: 2023-05-29 12:31 GMT

டெல்லி,

தலைநகர் டெல்லியின் ரோகிணி நகரை சேர்ந்த16 வயதான ஷாக்ஷி என்ற சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதான ஷகில் என்ற இளைஞனும் காதலித்து வந்துள்ளனர். ஷகில் ஏ.சி.மெக்கானிக்காக வேலை செய்து வந்துள்ளார்.

இதனிடையே, காதல் ஜோடிகளுக்கு இடையே நேற்று முன் தினம் கருத்து வேறுபட்டு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று இரவு சிறுமி தனது தோழியின் மகன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க ஷாபத் டைரி பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது சிறுமியை பின் தொடர்ந்து வந்த ஷகில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமி ஷாக்ஷியை சரமாரியாக குத்தினார். சிறுமியின் வயிறு, தலையில் சரமாரியாக 40 முறை குத்தினார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சிறுமியை கொலை செய்த பின்னும் ஆத்திரம் அடங்காத ஷாகில் அருகே கிடந்த பாறாங்கல்லை கொண்டு சிறுமியின் தலையில் போட்டார். இதில் சிறுமியின் முகம் சிதைந்தது.

மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இந்த கொடூர கொலை நடந்த நிலையில் கொலையை யாரும் தடுக்கவில்லை. சிறுமியை கொலை செய்த ஷாகில் அங்கிருந்து எந்தவித பதற்றமும் இன்றி நடந்து சென்றார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுமியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஷாகிலை உத்தரபிரதேச மாநிலம் பிலந்தசாஹர் பகுதியில் வைத்து போலீசார் இன்று கைது செய்தனர்.

இந்நிலையில், மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் சிறுமி கத்தியால் குத்தியும், பாறை கல்லை தலையில் போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மலிவல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 16 வயது சிறுமி 40 முதல் 50 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார். பின்னர் பல முறை கல்லால் தாக்கப்பட்டுள்ளார். இதில் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை அருகில் நின்ற பலர் பார்த்துள்ளனர் ஆனால் யாரும் எதுவும் செய்யவில்லை. பெண்கள், சிறுமிகள் வாழ பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி மாறிவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி, டெல்லி கவர்னர், டெல்லி மகளிர் ஆணையம், டெல்லி முதல்-மந்திரி உயர்மட்ட கூட்டம் நடத்த மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும்' என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்