டெல்லி; பி-20 தலைமைத்துவம் பிரேசில் நாட்டிடம் முறைப்படி ஒப்படைப்பு
2024-ம் ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை நடத்தவுள்ள பிரேசில் நாட்டிடம் பி-20 தலைமைத்துவம் இன்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
ஜி-20 தலைவர்களுக்கான உச்சி மாநாட்டை நடப்பு ஆண்டில் இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த குழுவினரும் இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜி-20 தலைவர்களுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பரில் நடைபெற உள்ளது. இதில், சர்வதேச வர்த்தக சமூகத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ ஜி-20 பேச்சுவார்த்தைக்கான அமைப்பாக பி-20 இந்தியா உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. இதன்படி, இந்த மாநாடு கடந்த 25-ந்தேதியில் இருந்து தொடங்கி 27-ந்தேதி வரை நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் 55 நாடுகளை சேர்ந்த 1,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஒரு தெளிவான கவனத்துடன் கூடிய இந்த பி-20 ஆனது, ஜி-20 குழுக்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி இதனை குறிப்பிட்டார். இந்த நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் நடந்த பி-20 இந்தியா உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றினார்.
இதன்பின்னர், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், 2024-ம் ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தவுள்ள பிரேசில் நாட்டிடம் பி-20 தலைமைத்துவம் இன்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதனை டாடா சன்ஸ் நிறுவன செயல் தலைவர் மற்றும் பி-20 இந்தியாவுக்கான தலைவரான சந்திரசேகரன் முறைப்படி வழங்கி பேசினார்.
அவர் பேசும்போது, ஜி-20 தலைமைத்துவத்தின் கீழான இந்தியாவின் பி-20 தலைமைத்துவம், பிரதமரின் வசுதேவ குடும்பகம் (ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம்) என்ற தொலைநோக்கு பார்வைக்கான கருப்பொருளின் கீழ் செயல்பட்டது.
கடந்த 7 மாதங்களில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அதில், 55 நாடுகளை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட சர்வதேச வர்த்தக செயலதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர் என பேசியுள்ளார்.