டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: பள்ளிகள், அலுவலகங்களை மூட உத்தரவு

டெல்லியில், வெள்ளம் புகுந்ததால் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள், அரசு அலுவலகங்களை ஞாயிற்றுக்கிழமைவரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-07-14 00:20 GMT

புதுடெல்லி,

டெல்லி, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது.

அதனால், இமாசலபிரதேசத்தில் இருந்து அதிக அளவில் திறந்து விடப்பட்ட தண்ணீர், அரியானா மாநிலம் ஹத்னிகுண்ட் தடுப்பணையை அடைந்தது. அங்கிருந்து வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி நீர், யமுனை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

யமுனை ஆற்றில் வேறு தடுப்பணையோ, அணையோ இல்லாததால், அந்த தண்ணீர் முழுவதும் டெல்லியை நோக்கி வந்தது. நேற்று முன்தினம் அதிகாலையில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் 207.55 மீட்டரை எட்டியது.

இதனால், டெல்லியின் குடியிருப்பு மற்றும் மார்க்கெட் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. டெல்லி வெள்ளத்தில் மிதக்க தொடங்கியது.

தலைமை செயலகத்தில் தண்ணீர்

தொடர்ந்து அதிகரித்த யமுனை ஆற்றின் நீர்மட்டம் நேற்று பகல் 1 மணி நிலவரப்படி, 208.62 மீட்டராக உயர்ந்தது. இது 'மிகவும் தீவிர சூழ்நிலை' என்று மத்திய நீர் ஆணையம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, யமுனையை ஒட்டியுள்ள பக்கத்து தெருக்களில் தண்ணீர் வழிந்தோடியது. அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் தண்ணீர் புகுந்தது.

டெல்லி தலைமை செயலகத்திலும் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மந்திரிகள், உயர் அதிகாரிகள் ஆகியோரின் அலுவலகங்களிலும் வெள்ளம் புகுந்தது.

இதுதொடர்பாக இதர அமைப்புகளுடன் இணைந்து நிலைமையை சரிசெய்ய முயன்று வருவதாக பொதுப்பணித்துறை தெரிவித்தது.

மிதக்கும் கார்கள்

கடமை பாதையில் இருந்து தலைமை செயலகம் செல்லும் சாலையும் வெள்ளக்காடானது.

போட் கிளப், பாண்டவ் நகர், காந்திநகர், பஜன்புரா ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து பாதுகாப்பான இடங்களை அடைந்தனர். சில இடங்களில், மக்கள் வெளியேற விருப்பமின்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரி கேட்டில் இருந்து புராணா லோகே கா புல் வரையிலான ரிங் ரோடு வெள்ளத்தில் மிதக்கிறது. அதனால் அச்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்ட சொகுசு கார்கள், தண்ணீரில் மிதக்கின்றன. சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள், பாலங்களில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர்.

வேகம் குறைத்த மெட்ரோ ரெயில்கள்

டெல்லி புளூலைன் பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தின் அணுகுசாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனால், அந்த ரெயில் நிலையத்தின் நுழைவாயிலும், வெளியேறும் வாயிலும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

யமுனை ஆற்றின் மேலே 4 இடங்களில் மெட்ரோ ரெயில் பாலங்கள் அமைந்துள்ளன. அந்த பாலங்களின் மீது மணிக்கு 30 கி.மீ. என்ற குறைவான வேகத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள வசிராபாத் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. வசிராபாத், சந்திரவால், ஓக்லா ஆகிய இடங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டன.

குடிநீர் தட்டுப்பாடு

வசிராபாத் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் பார்வையிட்டார். டெல்லியில் சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதுதொடர்பாக அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால், வசிராபாத், சந்திரவால், ஓக்லா ஆகிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், டெல்லியில் சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும்.

அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம். நீர்மட்டம் குறைந்தவுடன், இந்த நிலையங்களை இயக்கத் தொடங்குவோம் என்று அவர் கூறியுள்ளார்.

வாகனங்களுக்கு தடை

சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதை கருத்தில் கொண்டு, சிங்கு எல்லை, படார்பூர் எல்லை, லோனி எல்லை, சில்லா எல்லை ஆகியவை வழியாக டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

உணவு, பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் பஸ்கள், காஷ்மீரிகேட் பஸ்நிலையத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால், சிங்கு எல்லையிலேயே நிறுத்தப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசலை கருத்தில்கொண்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுகின்றன. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சுடுகாடுகள் மூடப்பட்டன

டெல்லி அரசு நடத்தும் சுஷ்ருதா விபத்து அவசர சிகிச்சை மையத்திலும் வெள்ளம் புகுந்தது. அதையடுத்து, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 3 நோயாளிகள் உள்பட மொத்தம் 40 நோயாளிகள், லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

நிகாமாபோத், கீதா காலனி ஆகிய இடங்களில் உள்ள சுடுகாடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அதனால் அவை மூடப்பட்டுள்ளன. இறந்தவர்களின் உடல்களை வேறு சுடுகாடுகளில் தகனம் செய்யுமாறு டெல்லி மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. செங்கோட்டை சுவர்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

கவர்னர் ஆலோசனை

வெள்ள பாதிப்பு குறித்து ஆராய கவர்னர் வி.கே.சக்சேனா, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்தினார். அதில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஞாயிற்றுக்கிழமைவரை மூடப்படும். அத்தியாவசிய பணிகளுடன் தொடர்பில்லாத அரசு அலுவலகங்களும் ஞாயிறுவரை மூடப்படும். தனியார் அலுவலகங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.

காஷ்மீரிகேட்டை ஒட்டியுள்ள வணிக நிறுவனங்கள், ஞாயிறுவரை மூடப்படும். சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதால், குடிநீர் வினியோகம் 25 சதவீதம் குறைக்கப்படும். எனவே, சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அவர் கூறினார்.

நீர்மட்டம் குறையும்

நேற்று பகல் 1 மணிக்கு 208.62 மீட்டராக இருந்த யமுனை நீர்மட்டம், மாலை 4 மணிக்கும் அதே அளவில் இருந்தது.

எனவே, நீர்மட்டம் நிலையான அளவுக்கு வந்து விட்டதாகவும், இனிமேல் குறையத் தொடங்கும் என்றும் மத்திய நீர் ஆணைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக குறைந்து விட்டதாக அவர் கூறினார்.

இருப்பினும், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்