ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாகப் பெற்ற வழக்கு: ராப்ரி தேவிக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்
அடுத்த மாதம் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.;
டெல்லி,
ரெயில்வே பணி வழங்குவதற்கு நிலம் லஞ்சமாக பெற்றதாக பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ராப்ரி தேவி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. லாலு பிரசாத் குடும்பத்தினர் பலரும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக ராப்ரி தேவி மற்றும் உறவினர்கள், கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் லாலு பிரசாத்துக்கு பெரும் அடியாக, அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி மற்றும் அவர்களது இரு மகள்கள் மிசா பார்தி மற்றும் ஹேமா யாதவ் மீது அமலாக்க இயக்குனரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்தக் குற்றப்பத்திரிகையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் குடும்பத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் அமித் கத்யால், சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
அமலாக்க இயக்குனரகத்தின் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட டெல்லி நீதிமன்றம், பீகார் முன்னாள் முதல் மந்திரி ராப்ரி தேவி மற்றும் அவரது மகள்கள் மிசா பார்தி மற்றும் ஹேமா யாதவ் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அடுத்த மாதம் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.