மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.;
புதுடெல்லி,
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
பின்னர், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. அவரை சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனு மீதான தீர்ப்பை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.