டெல்லி பட்ஜெட்: முதன்முறையாக மொஹல்லா பஸ், பெண்களுக்கான கிளினிக்குகள் அறிவிப்பு

டெல்லி சட்டசபையில் நிதி மந்திரி கைலாஷ் கெலாட் 2023-24-ம் ஆண்டுக்கான ரூ.78,800 கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்து உள்ளார்.

Update: 2023-03-22 13:13 GMT



புதுடெல்லி,


டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில், மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா, சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், கைலாஷ் கெலாட் நிதி மந்திரி பொறுப்பை ஏற்று கொண்டார்.

இதனை தொடர்ந்து, டெல்லி சட்டசபையில் நிதி மந்திரி கைலாஷ் கெலாட் 2023-24-ம் ஆண்டுக்கான ரூ.78,800 கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்து பேசினார்.

அவர் முதன்முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட், ஒரு தூய்மையான, அழகான மற்றும் நவீன டெல்லிக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு 1,400 கி.மீ. சாலை மேம்படுத்துதலுக்காக ரூ.19,466 கோடி செலவிடப்படும். பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.2,034 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கல்விக்கு அதிக அளவாக ரூ.16,575 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி கெலாட் கூறும்போது, பெரியது முதல் சிறிய அம்சங்கள் வரையிலான பணிகள் முடிக்கப்பட்ட இதுபோன்ற ஒரு விரிவான திட்டம் சார்ந்த விசயங்களை எந்த மாநிலமும் கொண்டிருக்கவில்லை.

பெண்களுக்காக மொஹல்லா கிளினிக்குகள் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது ஒரு நல்ல விசயம். அதனை நாங்கள் முன்னெடுத்து செல்வோம். மெட்ரோ நிலையங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் பெண்களுக்கான மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்படும்.

டெல்லி வரலாற்றில் முதன்முறையாக மொஹல்லா பஸ் வர இருக்கிறது. இதன்படி, சிறிய பஸ்களும் கொள்முதல் செய்யப்படும். டெல்லி மக்களின் வசதிக்காக டெல்லி அரசு இந்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்