டெல்லி: பைக்கில் வந்த நபர்கள் அட்டகாசம்; பையை பறித்து, தள்ளி விட்டு சென்றதில் பெண் நீதிபதி காயம்
டெல்லியில் மகனுடன் நடைபயிற்சி சென்ற பெண் நீதிபதியை, பைக்கில் வந்த கொள்ளையர்கள் பையை பறித்து, தள்ளி விட்டு சென்றதில் அவர் காயம் அடைந்து உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் குலாபி பாக் பகுதியில் காலை வேளையில் ரச்னா திவாரி லக்கன்பால் என்ற பெண் நீதிபதி, மாஸ்டர் யுவராஜ் என்ற தனது 12 வயது மகனுடன் நடைபயிற்சிக்காக வெளியே சென்று உள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர் திடீரென நீதிபதியை தாக்கி அவரிடம் இருந்த கைப்பையை பறித்து உள்ளனர். ஆனால், உஷாரான பெண் நீதிபதி பையை பறிக்க விடாமல் தடுத்து உள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பைக் நபர்கள் பையை பிடுங்கி கொண்டு, அவரை கீழே தள்ளி விட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தில் பெண் நீதிபதியின் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது.
உடன் இருந்த அவரது மகன் உடனடியாக தனது தந்தைக்கு மொபைல் போன் வழியே தகவல் தெரிவித்து உள்ளார். அவர் வந்து நீதிபதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்.
இதுபற்றி நீதிபதி மகன் போலீசில் புகார் அளித்து உள்ளான். அதில், பைக்கில் வந்த 2 பேர் தனது தாயார் ரச்னாவின் கைப்பையை பறித்து கொண்டு, தப்பி சென்றனர். அந்த பையில் ரூ.8 ஆயிரம் பணம், சில ஆவணங்கள் மற்றும் ஏ.டி.எம். அட்டை ஆகியவை இருந்தன.
பைக் கொள்ளையர்கள் தள்ளி விட்டதில் நீதிபதிக்கு தலையில் லேசான அளவிலான காயம் ஏற்பட்டு உள்ளது என புகாரில் தெரிவித்து உள்ளான்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தில்ஷாத் மற்றும் ராகுல் கைது செய்யப்பட்டனர். சி.சி.டி.வி. காட்சியை அடிப்படையாக கொண்டு பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களில் தில்ஷாத்துக்கு கொள்ளை, செயின் பறிப்பு உள்பட 10-க்கும் கூடுதலான குற்ற வழக்குகளுடன் தொடர்பு உள்ளது என்றும் ராகுல் முதல் முறையாக குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து பைக், ஏ.டி.எம். அட்டை மற்றும் ரூ.4,500 பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.