டெல்லி; நின்ற கார் மீது மினிலாரி மோதி போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
டெல்லியில் நின்ற கார் மீது மினிலாரி மோதி போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி பாதுகாப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் ஜக்பீர் சிங். இவர் தனது காரில் இன்று காலை சென்றுள்ளார். அவ்வாறு செல்லும் போது காரில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால் காரை மதிப்பூர் மெட்ரோ நிலையம் அருகில் உள்ள ரொக்தக் சாலை ஓரத்தில் நிறுத்தி உள்ளார். காரை விட்டு இறங்கி அருகில் நின்றுள்ளார்.
இந்நிலையில் அந்த சாலையில் வேகமாக வந்த மினிலாரி ஒன்று கார் மீது மோதியது. மேலும் காரின் அருகில் நின்ற ஜக்பீர் சிங்கின் மீதும் மோதியது. இந்த விபத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை எற்படுத்திய மினிலாரி டிரைவர் தப்பி ஓடினார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டெல்லி காவல் துறையினர், விபத்தில் சிக்கி உயிரிழந்த இன்ஸ்பெக்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.