ஆழ்ந்த தூக்கம் அவசியம்; அதிகமாக 'ரீல்ஸ்' பார்க்காதீர்கள்; மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

படிப்பையும், உடல்நலத்தையும் மாணவர்கள் சமச்சீராக பராமரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-01-29 17:59 GMT

புதுடெல்லி,

பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கி, தன்னம்பிக்கை ஊட்டும் முயற்சியாக 'பரிக்ஷா பே சார்ச்சா' (தேர்வும், தெளிவும்) என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி 2018-ம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறார். இன்று இதன் 7-வது ஆண்டு நிகழ்ச்சி, டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில், தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் பிரதமர் மோடி உரையாடினார். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

மாணவர்கள் எத்தகைய அழுத்தங்களையும் தாங்கிக்கொள்ளும் திறனை பெற வேண்டும். அழுத்தங்களை சமாளிக்க உதவும் வகையில், தங்கள் குழந்தைகளுக்கு மீண்டெழும் திறனை பெற்றோர் ஊட்ட வேண்டும். நல்ல புத்திக்கூர்மையுள்ள, கடின உழைப்பாளிகளை மாணவர்கள் தங்களது நண்பர்களாக்கி கொள்ள வேண்டும். அவர்களிடம் நீங்கள் உத்வேகம் பெறலாம். படிப்பு மற்றும் தேர்வு தொடர்பான அழுத்தங்கள் உங்களை மூழ்கடிக்க செய்து விடாதீர்கள். போட்டியும், சவால்களும் உத்வேகமாக இருக்க வேண்டும். ஆனால், போட்டி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான பிணைப்பு, எதிர்காலத்துக்கு அடித்தளமாக இருக்க வேண்டும். முதல் நாளில் இருந்தே நல்லுறவை உருவாக்க தொடங்கினால், தேர்வின்போது பதற்றம் இருக்காது. பாடத்திட்டத்துக்கு அப்பாலும் மாணவர்களுடன் ஆசிரியர்கள் தொடர்பை விரிவுபடுத்த வேண்டும்.

படிப்பையும், உடல்நலத்தையும் சமச்சீராக பராமரிக்க வேண்டும். சில மாணவர்கள், செல்போனை மணிக்கணக்காக பயன்படுத்துகிறார்கள். தூங்கும் நேரத்தில் 'ரீல்ஸ்' பார்க்கிறார்கள். செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதுபோல், நமது உடம்புக்கும் ரீசார்ஜ் தேவைப்படுகிறது. ஆரோக்கியமான உடல்நிலைக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம். எனவே, 'ரீல்ஸ்' பார்க்க தூங்கும் நேரத்தை பயன்படுத்தாதீர்கள்.

செல்போன், லேப்டாப் வந்த பிறகு நிறைய குழந்தைகள் எழுதும் பழக்கத்தையே இழந்து விட்டனர். படிக்கும் நேரத்தில் 50 சதவீதத்தை எழுதி பழகுவதற்கு ஒதுக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள் மாணவர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்