மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் சுரங்க வாகன நிறுத்தம் அமைக்க முடிவு

பெங்களூருவில் 150 கார்களை நிறுத்தும் விதமாக மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் சுரங்க வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-01 18:45 GMT

பெங்களூரு:

வாகனங்களை நிறுத்த பிரச்சினை

பெங்களூரு ஹட்சன் சர்க்கிள் அருகே மாநகராட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் அங்கு வரும் பொது மக்கள் தங்களது வாகனத்தை நிறுத்துவதற்காக போதுமான வாகன நிறுத்தம் இல்லை. அதேநேரத்தில் மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையும் 198-ல் இருந்து 243 ஆக உயர்த்தப்படுகிறது. இதனால் மாநகராட்சி கவுன்சிலர்களின் வாகனங்களையும் நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது.

மாநகராட்சியில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்டம் நடைபெறுவது உண்டு. அந்த சந்தர்ப்பத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரும் சிரமம் எற்படுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்ணாடி மாளிகை முன்பாக புதிதாக வாகனம் நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கண்ணாடி மாளிகைக்கு முன்பாக சுரங்கம் அமைத்து இந்த வாகன நிறுத்தம் அமைக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

சுரங்கம் அமைத்து...

அதாவது கண்ணாடி மாளிகை முன்பாக சுரங்கத்தில் 3 அடுக்குகளில் இந்த வாகனம் நிறுத்தம் அமைய இருக்கிறது. இதன்மூலம் அந்த வாகன நிறுத்தத்தில் 150 கார்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் நிறுத்த முடியும் என்றும், தேவைப்பட்டால் கூடுதலாக 50 கார்களை நிறுத்துவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறுகையில், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்த பிரச்சினை இருப்பதால், டாக்டர் ராஜ்குமார் கண்ணாடி மாளிகை முன்பாக 150 கார்களை நிறுத்தும் விதமாக சுரங்கம் அமைத்து புதிய வாகன நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அரசுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்