பிரதமர் மோடி நாளை கேரளா வருகை -உச்ச கட்ட பாதுகாப்பு

கேரளாவில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க டெல்லியில் இருந்து எஸ்.பி.ஜி. அதிகாரிகள் குழு ஐ.ஜி. சுரேஷ் ராஜ் புரோகித் தலைமையில் கேரளா வந்தனர்.

Update: 2023-04-23 04:48 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் அதிவேக ரெயில் சேவை நாளை  தொடங்குகிறது. இதனை பிரதமர் மோடி திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் நாளை மாலை தனி விமானம் மூலம் கொச்சி வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் நாளை இரவு கொச்சியில் தங்குகிறார்.

இந்த நிலையில் கேரளா வரும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாரதிய ஜனதா மாநில அலுவலகத்திற்கு மர்ம கடிதம் வந்தது. இதுபற்றி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில் காந்திடம் புகார் அளித்தார். அவர் மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்தினார். இதில் அந்த கடிதம் கொச்சியில் உள்ள ஒரு நபர் பெயரில் எழுதப்பட்டிருந்தது. அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த நபருக்கும், இன்னொருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும், அவர் தான் தனது பெயரில் இப்படியொரு மிரட்டல் கடிதத்தை எழுதி இருக்கலாம் எனவும் கூறினார்.

கொலை மிரட்டல் கடிதம் தொடர்பான விவகாரம் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் கேரளா வரும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவர் தங்கும் இடங்கள், அவரது நிகழ்ச்சி நிரல் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட விபரங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் கசிந்தது. இது உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் சமூக வலைதளத்தில் கசிந்தது எப்படி? அதனை பொது வெளியில் வெளியிட்டது யார்? என்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கேரளாவில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க டெல்லியில் இருந்து எஸ்.பி.ஜி. அதிகாரிகள் குழு ஐ.ஜி. சுரேஷ் ராஜ் புரோகித் தலைமையில் கேரளா வந்தனர். அவர்கள் கேரள போலீஸ் டி.ஜி.பி. மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்ட அவர்கள் பிரதமர் மோடி கேரளாவில் மேற்கொள்ளும் பயண விபரங்கள், நிகழ்ச்சி நிரல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் மோடி செல்லும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். கேரளாவில் பிரதமர் மோடி தங்கி இருக்கும் 2 நாட்களும் அவரது பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கும் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் 1,2,3-வது பிளாட்பாரங்களை நிகழ்ச்சி முடியும் வரை மூடி வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். இதுபோல ரெயில் நிலையம் அருகே உள்ள தாம்பானூர் பஸ் நிலையமும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி முடியும் வரை தற்காலிகமாக அடைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்