கங்கை ஆற்றில் செல்பி எடுக்கும்போது தவறி விழுந்து 3 பேர் உயிரிழப்பு
நீர்வீழ்ச்சி, மலைப்பகுதி, ஆறுகளில் ரீல்ஸ் எடுக்கும்போது தொடர்ச்சியாக பலர் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.;
புதுடெல்லி,
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள புனித தலங்களை பார்வையிட பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 நண்பர்கள் ஆகஸ்ட் 24 அன்று சென்றுள்ளனர். அப்போது கங்கை ஆற்றின் அருகே செல்பி எடுக்க முயன்றபோது, சோனா சிங் (19) என்ற மருத்துவ மாணவி ஆற்றில் தவறி விழுந்துள்ளார். உடனே அவரை காப்பாற்ற அவரது நண்பர்களான ரிஷி, வைபவ் சிங் ஆகியோரும் ஆற்றில் குதித்துள்ளனர்.
ஆனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, 3 பேரின் உடல்களையும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர். அப்போது வைபவ் சிங் என்ற இளைஞரின் உடலை அவர்கள் மீட்டனர்.
மற்ற 2 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வைபவ் சிங் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஆபத்தான இடங்களில் செல்பி, ரீல்ஸ் எடுக்கும் போது தொடர்ச்சியாக பலர் உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.