தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஒரு சுங்கச்சாவடி அகற்றப்படும் பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் பதில்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஒரு சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-15 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் யு.டி.காதர், "கர்நாடகத்தில் சுங்கச்சாவடிகள் 60 கிலோ மீட்டம் இடைவெளியில் தான் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் தட்சிண கன்னடா மாவட்டம் சூரத்கல் பகுதியில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 2 சுங்கச்சாவடிகள் உள்ளன. இது சட்டவிரோதம். மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி, 60 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று கூறி இருந்தார்" என்றார்.

அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல், "தட்சிண கன்னடா மாவட்டம் சூரத்கல்லில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 2 சுங்கச்சாவடிகள் இருப்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அதில் ஒரு சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்படும்" என்றார். இதையடுத்து மீண்டும் பேசிய யு.டி.காதர், "கர்நாடகத்தில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 19 சுங்கச்சாவடிகள் உள்ளன. இது சட்டவிரோதமானது. இவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்