தட்சிண கன்னடா மாவட்டத்தில் தசரா தரிசன சுற்றுலா தொகுப்பு திட்டம்; கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல்
தட்சிண கன்னடா மாவட்டத்தில் தசரா தரிசன சுற்றுலா தொகுப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. தெரிவித்துள்ளது.
மங்களூரு;
தசரா தரிசன தொகுப்பு
நவராத்திரி பண்டிகையையொட்டி கர்நாடக அரசு சாலை போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) மங்களூரு மண்டலம் சார்பில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் தசரா தரிசன சுற்றுலா தொகுப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள முக்கிய 9 கோவில்களுக்கு சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் ஒருநாள் சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.
மங்களூரு பஸ் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் பஸ், மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்றுவிட்டு இரவு 8.30 மணிக்கு மங்களூரு பஸ் நிலையத்துக்கு வரும். இதில் டிக்கெட் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.300-ம், சிறியவர்களுக்கு ரூ.250-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. மங்களூரு மண்டல அதிகாரி ராஜேஸ் ஷெட்டி கூறியதாவது:-
9 கோவில்கள்
நவராத்திரி பண்டிகையையொட்டி கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் தசரா தரிசன சுற்றுலா தொகுப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மாவட்டத்தில் உள்ள முக்கிய 9 கோவில்களுக்கு ஒருநாள் சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.
சுற்றுலா தொகுப்பு திட்டத்தில் மங்களாதேவி கோவில், பொலாளி ராஜராஜேஸ்வரி கோவில், சுங்கதகட்டே அம்பிகா அன்னப்பூர்னேஸ்வரி கோவில், கட்டீல் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில், பாப்பநாடு துர்காபரமேஸ்வரி அம்மன் கோவில், சசிஹித்லு பகவதி அம்மன் கோவில், சித்ராபுரா துர்காபரமேஸ்வரி அம்மன் கோவில், உருவா மாரியம்மா கோவில், குத்ரோலி கோகர்ணநாதா கோவிலுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
கூடுதல் பஸ்களை இயக்க...
இந்த தசரா தரிசன சுற்றுலா தொகுப்பு திட்டத்துக்கு நகர பஸ்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த திட்டத்தில் பெரியவர்களுக்கு ரூ.300-ம், சிறியவர்களுக்கு ரூ.250-ம் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி பண்டிகையையொட்டி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தட்சிண கன்னடா மாவட்டத்தில் முதல் முறையாக தசரா தரிசன சுற்றுலா தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் வரவேற்பை பொறுத்து நாளொன்றுக்கு கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்யப்படும்.