அசாமில் கொடூரம்... கணவர், உறவினர்கள் வற்புறுத்தி, வாயில் ஆசிட் ஊற்றியதில் பெண் உயிரிழப்பு

அசாமில் பெண் குழந்தை பெற்ற மனைவியின் வாயில், கணவர் மற்றும் உறவினர்களே கட்டாயப்படுத்தி ஆசிட் ஊற்றி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-07-14 10:13 GMT


கரீம்கஞ்ச்,



அசாமில் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ரதபாரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பைரப்நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷகீல் அகமது. இவரது மனைவி சும்னா பேகம்.

இந்நிலையில், மனைவி பேகமின் வாயில் அவரது கணவர் ஷகீல் மற்றும் ஷகீலின் உறவினர்கள் சேர்ந்து கட்டாயப்படுத்தி ஆசிட் ஊற்றி அவரை குடிக்க வைத்து உள்ளனர். இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி பேகம் உயிரிழந்து விட்டார். இதுபற்றி கரீம்கஞ்ச் மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரெண்டு பத்மநாப பருவா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பேகமின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பேகம் கடந்த சில நாட்களாக அவரது கணவர் மற்றும் உறவினர்களால் கடுமையாக மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்து வந்துள்ளார். இந்த வழக்கில், பேகமின் கணவரை கைது செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

பெண் குழந்தை பெற்றதற்காக கணவர் மற்றும் அவரது உறவினர்கள் பேகம் மீது ஆத்திரத்தில் இருந்து உள்ளனர் என கூறப்படுகிறது. ஆண் குழந்தை பெற்றெடுக்காததற்காக ஆசிட் குடிக்க வைத்து அவரை கொலை செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இதுபற்றி தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. மனைவியை, கணவர் மற்றும் உறவினர்களே ஒன்று சேர்ந்து வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்