வங்கக்கடல் முதலைகளும், சுந்தரவன காடுகளின் புலியும் கடிக்கும் - பாஜகவுக்கு மம்தா எச்சரிக்கை
ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் மேற்குவங்காள மந்திரியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
கொல்கத்தா,
ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் மேற்குவங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பார்த்தாவின் உதவியாளர் அர்பிதா பானர்ஜி வீட்டில் நடந்த சோதனையில் 21.90 கோடி ரூபாய் பணம், நகை, செல்போன்கள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையின் கைப்பற்றினர்.
இதையடுத்து, சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் மந்திரி பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியை அமலாக்கத்துறையில் கடந்த 23-ம் தேதி மாலை கைது செய்தனர்.
ஆனால், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் மந்திரி பார்த்தா சாட்டர்ஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் மாநில அரசின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் பார்த்தா சாட்டர்ஜி நலமுடம் இருப்பதாக கூறினர். இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கொல்கத்தா அழைத்து வரப்பட்ட பார்த்தா சாட்டர்ஜியிடம் அமலாக்கத்துறையினர் இன்று விசாரணையை தொடங்க உள்ளனர்.
பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை வரும் 3-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், தனது அமைச்சரவையில் உள்ள மந்திரி பார்த்தா சாட்டர்ஜி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு குறித்து மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அவர் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் கூறுகையில், நாட்டின் மிகச்சிறந்த நம்பர் ஒன் மருத்துவமனையான எஸ்எஸ்கேஎம்- இல் (மேற்குவங்காள மாநில அரசின் மருத்துவமனை) பார்த்தா சாட்டர்ஜி அனுமதிக்கப்பட்டிருந்தபோது மத்திய அரசுடன் தொடர்பில் உள்ள மருத்துவமனைக்கு (ஏய்ம்ஸ் மருத்துவமனை) பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கொண்டு சென்றது ஏன்?. இஎஸ்ஐ மருத்துவமனை, கமண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாதது ஏன்? இதன் நோக்கம் என்ன? இது மேற்குவங்காள மக்களை அவமதிக்கும் செயல் இல்லையா?. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மத்திய அரசு நிரபராதி மற்றும் அனைத்து மாநிலங்களும் திருடர்களா? மாநிலங்களால் தான் நீங்கள் (பாஜக) மத்தியில் உள்ளீர்கள்.
மராட்டியத்தால் இந்த முறை எதிர்த்து சண்டையிட முடியவில்லை. மராட்டியத்திற்கு அடுத்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்காளம் என்று கூறிகின்றனர். இங்கு வர முயற்சித்து பாருங்கள். வங்காள விரிகுடாவை நீங்கள் கடக்க வேண்டும். முதலைகள் உங்களை கடிக்கும். சுந்தரவனக்காடுகளில் வங்கப்புலிகள் உங்களை கடிக்கும். வடக்கு வங்காளத்தில் யானைகள் உங்களை புரட்டும். மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எனது கட்சியை உடைத்துவிடலாம் என பாஜக நினைத்தால் அது தவறு. குறிப்பிட்ட காலத்திற்கும் உண்மை நிச்சயம் வெளிவரும்.
நான் யாரையும் விடவில்லை. யாரேனும் திருடனோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவர்களை நான் விடுவதில்லை. நான் எனது சொந்த மக்களையே கைது செய்துள்ளேன். எனது எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள், மந்திரிகளையும் தப்பவிடுவதில்லை. என் மீது நீங்கள் மை வீச முயற்சித்தால் நான் உங்கள் மீது சகதியை வீசுவேன்' என்றார்.