அரசு பஸ் டிரைவர் அரிவாளால் வெட்டி படுகொலை

கலபுரகி பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2023-05-11 18:45 GMT

கலபுரகி:

கலபுரகி பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

அரசு பஸ் டிரைவர்

கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா மதரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகய்யாசாமி(வயது 45). இவர், கடந்த 20 ஆண்டுகளாக அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று காலையில் வழக்கம் போல் கலபுரகி பணிமனைக்கு அவர் வேலைக்கு வந்தார். பின்னர் காலையில் 2 வழித்தடங்களில் பஸ் ஓட்டிவிட்டு மதியம் 1.30 மணியளவில் கலபுரகி பஸ் நிலையத்திற்கு நாகய்யாசாமி வந்தார்.

பஸ்சில் இருந்து இறங்கி அங்கிருந்த கடைக்கு அவர் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென்று நாகய்யாசாமியை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கினார்கள். உடனே மர்மநபர்களிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து நாகய்யாசாமி ஓடினார். ஆனாலும் மர்மநபர்கள் அவரை விடாமல் துரத்தி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.

படுகொலை

இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த நாகய்யாசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். உடனே மர்ம நபர்கள், அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு வாகனத்தில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசலு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து டிரைவர் நாகய்யாசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாகய்யாசாமியின் கொலைக்கு சரியான காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரம்மாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்