பெண் டாக்டர் கொலையில் எதிர்க்கட்சிகள் உண்மையை மறைக்க முயற்சி - மம்தா பானர்ஜி தாக்கு

குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்க எதிர்க்கட்சிகள் ஆர்.ஜி. கார் மருத்துவமனையை சூறையாடியதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2024-08-16 13:37 GMT

கொல்கத்தா,

கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஒய்ந்தபாடில்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில் கொல்கத்தாவில் இன்று மாலை மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தி கொல்கத்தாவில் பேரணி நடத்த உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இந்தநிலையில் பேரணியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

பெண் டாக்டர் கொலை வழக்கில் உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் சில தரப்பினர் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக பொய்களைப் பரப்புகிறார்கள். எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்பி உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது. இதுபோன்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சேதத்தின் பின்னணியில் சி.பி.ஐ.(எம்) மற்றும் பா.ஜ.க. உள்ளது. இடதுசாரிகளுக்கும் பா.ஜ.க.,வுக்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்த வேண்டும். குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்க எதிர்க்கட்சிகள் மருத்துவமனையை சூறையாடி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்