காதலர் தினத்தில் பசு அணைப்பு தினம்... வரவேற்பும், எதிர்ப்பும்

வேலண்டைன்ஸ் தினம் போன்ற சமூக சீர்கேடு விளைவிக்கும் விசயங்களில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டுமென உத்தர பிரதேச விலங்குகள் நல அமைப்பின் மந்திரி தரம்பால் சிங் கூறியுள்ளார்.

Update: 2023-02-11 02:43 GMT



புதுடெல்லி,


உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந்தேதி வேலண்டைன்ஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை காதலர் தினம் என்று பல்வேறு நாடுகளிலும் பலர் கொண்டாடி வருகின்றனர்.

காதலர் தினத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இந்திய விலங்குகள் நல வாரியம் கடந்த 8-ந்தேதி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தது.

அதில், இந்த தினத்தில் நீங்கள் பசுக்களை அணைத்து கொண்டாடுங்கள். அப்படி செய்யும்போது, உணர்வுரீதியாக வளமும் மற்றும் கூட்டான மகிழ்ச்சியும் கிடைக்க பெறும்.

இந்திய கலாசாரம் மற்றும் ஊரக பொருளாதாரத்தின் முதுகெலும்பு பசு என நாம் அனைவருக்கும் தெரியும். நம்முடைய வாழ்வை நீடித்திருக்க செய்வதுடன், கால்நடை வளம் மற்றும் பல்லுயிர்மம் ஆகியவற்றையும் பிரதிபலிக்கின்றது.

அன்னை போல் நம்மை வளர்த்தெடுக்கும் இயற்கையான பண்புகளால், அனைவருக்கும் வழங்கும் குணநலன்களால் அது காமதேனு என்றும் கோமாதா என்றும் அழைக்கப்படுகிறது. மனித இனத்திற்கு வளங்களை வழங்குகிறது என அதுபற்றிய அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

வளர்ந்து வரும் மேற்கத்திய கலாசார போக்கால், வேதகால பாரம்பரியங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. பசுவை பாதுகாப்பது அதனை பாதுகாக்க உதவும் என்றும் தெரிவித்து உள்ளது.

அதனால், வாழ்வை மகிழ்ச்சியாக்க மற்றும் நல்ல ஆற்றல் முழுவதும் கிடைக்க தாயான பசுவின் முக்கியத்துவங்களை மனதில் கொண்டு, பிப்ரவரி 14-ந்தேதியை பசுக்களை விரும்புவோர் அனைவரும் பசுவை அணைக்கும் நாளாக கொண்டாடலாம் என்றும் தெரிவித்தது.

இதற்கு விலங்குகள் நல துறை, மீன்வள அமைச்சகம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகளின் ஒப்புதலும் பெறப்பட்டு, அதன் உத்தரவின்பேரில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது என தெரிவித்து இருந்தது.

இதனை தொடர்ந்து மத்திய மந்திரி கிரிராஜ் சிங் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு வெளியிட்டார். ஒவ்வொருவரும் பசுக்கள் மீது அன்பு செலுத்துவோம் என நேற்று முன்தினம் கூறினார்.

இதேபோன்று மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சனா ஜோதி இந்த முடிவை வரவேற்று கூறும்போது, 33 கோடி ஆண், பெண் கடவுள்கள் பசுவின் உடம்பில் வசிக்கின்றனர் என கூறினார். இதற்காக மதிப்புமிக்க மந்திரிக்கு நன்றி. பசுக்கள் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை நமக்கு பால் தருகிறது. நாமும் பால் குடிக்கிறோம். பசுவை அன்னையாக ஏன் வழிபட கூடாது? என கூறியுள்ளார்.

இந்த அறிக்கைக்கு பின்னர் உத்தர பிரதேச விலங்குகள் நல அமைப்பின் மந்திரி தரம்பால் சிங்கும், பசு அணைப்பு நாளை கொண்டாட மக்களை வலியுறுத்தினார். வேலண்டைன்ஸ் தினம் வேண்டாம் என நினைப்பவர்கள், விரும்பினால் பசுவை அணைக்கும் நாளை கொண்டாடலாம் என கூறினார்.

வேலண்டைன்ஸ் தினம் கொண்டாடப்பட கூடாது என நான் நினைக்கிறேன். ஏனெனில், சமூகத்தில் முறைகேட்டை விளைவிக்கும் விசயங்களில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில், இந்திய விலங்குகள் நல வாரியம் விடுத்து உள்ள அறிக்கையில், மத்திய மீன்வள அமைச்சகம், விலங்குகள் நல துறை உத்தரவின் பேரில் எங்களது அமைப்பு வெளியிட்ட 2023, பிப்ரவரி 14-ந்தேதியை பசு அணைப்பு தினம் ஆக கொண்டாடும் அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது என தெரிவித்தது.

இந்த அறிக்கைக்கு, ஒருசில தரப்பினரிடம் இருந்து வரவேற்பு கிடைத்த போதிலும், விலங்குகள் நல வாரியத்தின் அறிக்கையை கேலி செய்யும் வகையிலான மீம்ஸ்களும் சமூக வலைதளத்தில் பரவின.

பிரதமர் மோடியின் புனித பசு கவுதம் அதானி என உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னா விமர்சித்து இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்