எச்.டி.ரேவண்ணாவுக்கு 14 வரை நீதிமன்ற காவல்

மைசூரை சேர்ந்த பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக எச்.டி.ரேவண்ணா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;

Update:2024-05-08 17:49 IST

பெங்களூரு,

ஹாசன் தொகுதி எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் பகிரங்கமாகி கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அமைத்துள்ளது. இந்த நிலையில் மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகரை சேர்ந்த பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக அவரது தந்தையான முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) எச்.டி.ரேவண்ணாவை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் எச்.டி.ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனு நீதிபதி சந்தோஷ் பட் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி எச்.டி.ரேவண்ணாவின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் எச்.டி.ரேவண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரது காவலை நீட்டிக்கும்படி எஸ்.ஐ.டி. வேண்டுகோள் விடுத்தது. அதனைத் தொடர்ந்து, ரேவண்ணாவை மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து. நீதிமன்ற உத்தரவை அடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ரேவண்ணாவை போலீஸ் அழைத்துச் சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்