ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவின் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு!

ஐஆர்சிடிசி ஓட்டல்களை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்குவதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

Update: 2022-10-18 08:09 GMT

புதுடெல்லி,

பீகார் மாநில துணை முதல்-மந்திரியாக உள்ள தேஜஸ்வி யாதவின் தந்தை லாலு பிரசாத் யாதவ், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) 2 ஓட்டல்களை ஒரு தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்குவதில் முறைகேடு நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் தற்போது ஜாமினில் உள்ள தேஜஸ்வி யாதவின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி கோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது சிபிஐ தரப்பில் கோர்ட்டில் கூறுகையில், "சிபிஐ விசாரணை அதிகாரி ஒருவர் மீது உத்தரபிரதேசத்தில் கொலை முயற்சி நடந்தது. அதன் பின் இந்த வழக்கின் விசாரணையில் அதிகாரிகளுக்கு அச்சம் நிலவுகிறது" என்று கூறப்பட்டது.

மேலும், பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆர்ஜேடி கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசிய ஆடியோவையும் சிபிஐ தரப்பு சமர்ப்பித்தது. அதில், தேஜஸ்வி யாதவ் கூறியதாவது, "சிபிஐ அதிகாரிகளுக்கு அம்மா, சகோதரிகள், குழந்தைகள் இல்லையா... அவர்கள் எப்போதும் சிபிஐ அதிகாரிகளாக இருப்பார்களா? அவர்கள் ஓய்வு பெறமாட்டார்களா? அரசியலமைப்பு அமைப்பின் கடமையை நீங்கள் உண்மையாகப் பின்பற்ற வேண்டும்" என்று பேசியிருந்தார்.

இவற்றை குறிப்பிட்டு தேஜஸ்வி யாதவின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு கோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்நிலையில், சிபிஐ குறித்து பேசிய பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவுக்கு டெல்லி கோர்ட்டு இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. "நீங்கள் பொதுவெளியில் பேசும்போது, சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கவும். துணை முதல் மந்திரியாக இருக்கும் போது இதுபோன்ற பேசலாமா?" என்று கண்டனம் தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்