மயான நிலம் ஒதுக்கியதில் பொய்யான தகவல்: கலெக்டர்கள் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
மயான நிலம் ஒதுக்கியதில் பொய்யான தகவல் அளித்ததாக கூறி, மாவட்ட கலெக்டர்களை நேரில் ஆஜராக ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
மயான நிலம்
கர்நாடகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மயான நிலம் ஒதுக்க வேண்டும் என கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராமங்கள் தோறும் குறிப்பிட்ட நிலம் மயான பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. அதுதொடர்பான அறிக்கையும் ஐகோர்ட்டில் தாக்கல்
செய்யப்பட்டது. கர்நாடகத்தில் உள்ள 29 ஆயிரத்து 616 கிராமங்களில், 27 ஆயிரத்து 903 கிராமங்களுக்கு மயான நிலம் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள கிராமங்களுக்கு விரைவில் மயான நிலம் ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கிராமங்களில் மயான நிலங்கள் ஒதுக்கிய விவகாரத்தில் கர்நாடக அரசு சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை பொய்யானது என கூறி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை முகமது இக்பால் என்பவர் தொடர்ந்தார். அந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் வீரப்பா, வெங்கடேஷ் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.
நேரில் ஆஜர்
அப்போது அரசு வழங்கிய அறிக்கையில் பொய்யான தகவல்கள் இருந்தது தெரிந்தது. அதாவது 1,394 கிராமங்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்படாமல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் வருகிற 17-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர். பொய்யான தகவல் அளிக்கப்பட்டது உறுதியானால், கலெக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.