மனைவியின் பிறந்த நாளுக்கு சிறை பேக்கரியில் இருந்து 'கேக்' வாங்க சுகேஷ் சந்திரசேகருக்கு அனுமதி..!!
மனைவியின் பிறந்த நாளுக்கு சிறை பேக்கரியில் இருந்து ‘கேக்’ வாங்க சுகேஷ் சந்திரசேகருக்கு அனுமதி அளித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.;
புதுடெல்லி,
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி லீனா பால் மண்டோலி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
லீனா பாலுக்கு பிறந்த நாள் வருவதால் அவருக்கு கேக் ஒன்று வாங்கி கொடுக்க அனுமதிக்க வேண்டும் என சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி சைலேந்தர் மாலிக், தனது மனைவியின் பிறந்த நாளுக்கு சிறை பேக்கரியில் இருந்து கேக் வாங்கி கொடுக்க சுகேஷ் சந்திரசேகருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதை சிறை அதிகாரி லீனாவிடம் 28-ந்தேதி (இன்று) ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.
மனுதாரர், குடும்பத்தினருடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இந்த அனுமதி வழங்கப்படுவதாகவும் இதில் சட்ட அம்சங்களை விட மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனுமதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.