நாட்டின் முதல் மின்சார டபுள் டெக்கர் ஏ.சி. பஸ் சேவை மும்பையில் இன்று தொடக்கம்

நாட்டின் முதல் மின்சார டபுள் டெக்கர் ஏ.சி. பஸ் சேவை மும்பையில் கொடியசைத்து இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

Update: 2023-02-21 07:34 GMT



மும்பை,


மராட்டியத்தின் மும்பை நகரில் மின்சார அடிப்படையில் இயங்க கூடிய பஸ் போக்குவரத்து சேவை பெஸ்ட் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதற்கு மக்களிடையே வரவேற்பு காணப்படுகிறது.

இதில், நாட்டிலேயே முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் வகையிலான திறன் பெற்ற குளுகுளு ஏ.சி. வசதியுடன் கூடிய டபுள் டெக்கர் பஸ் சேவையை தொடங்க முடிவானது. இதற்காக சுவிட்ச் இஐவி 22 என்ற பெயரிலான பஸ் ஒன்று கடந்த 13-ந்தேதி பெஸ்ட் போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பஸ்சுக்கு ஆர்.டி.ஓ. அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இன்று முதல் பயணிகளுக்காக அதன் சேவை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இதனை மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த பஸ்சானது சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் பகுதியில் இருந்து என்.சி.பி.ஏ. பகுதி வரை, திங்கள் முதல் வெள்ளி வரை என வாரத்திற்கு 5 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த இடைப்பட்ட தொலைவில் பயணிக்க ரூ.6 கட்டணம் வசூலிக்கப்படும். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பாரம்பரிய சுற்றுலாவின் ஒரு பகுதியாக இயக்கப்படும்.

இந்த பஸ்சில் ஓட்டுநர் தவிர்த்து, 54 பயணிகள் பயணிக்க முடியும். ஒரு முறை ஒன்றரை முதல் 3 மணிநேரம் வரை மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்டால், பஸ் 250 கி.மீ. தொலைவு வரை செல்லும் திறன் பெற்றது.

மும்பையில் நாள்தோறும் 40 லட்சம் பயணிகள் பெஸ்ட் போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து சேவை என்பதற்காக இதுபோன்ற 900 மின்சார பஸ்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்