மராட்டியம், டெல்லி, கேரளாவில் கொரோனா அதிகரிப்பு

மராட்டியம், டெல்லி, கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

Update: 2022-08-18 23:51 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியாவில் மராட்டியம் (1,800), டெல்லி (1,652), கேரளா (1,151) ஆகிய 3 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நேற்று அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று 12 ஆயிரத்து 608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்த தொற்றுக்கு இதுவரையில் 4 கோடியே 42 லட்சத்து 98 ஆயிரத்து 864 பேர் ஆளாகி உள்ளனர்.

நேற்று முன்தினம் 3 லட்சத்து 62 ஆயிரத்து 20 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் தினசரி பாதிப்பு 3.48 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு 4.20 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது.

நாடெங்கும் கொரோனாவில் இருந்து நேற்று ஒரு நாளில் 16 ஆயிரத்து 251 பேர் மீட்கப்பட்டு பல்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 4 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 315 பேர் தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு விகிதம் 98.58 சதவீதம் ஆகும்.

கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 3.715 குறைந்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1 லட்சத்து ஆயிரத்து 343 ஆக சரிந்தது. மொத்த பாதிப்பில் இது 0.23 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் நேற்று முன்தினம் 36 பேர் பலியாகினர். நேற்று இந்த எண்ணிக்கை இரு மடங்கு (72) ஆகி உள்ளது. இதுவரை மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 206 பேர் தொற்றால் இறந்திருக்கிறார்கள். இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக குறைந்தது.

நேற்று கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 29-ஐ கணக்கில் கொண்டு வந்தனர்.

டெல்லியில் 8 பேரும், மராட்டியத்தில் 6 பேரும், அரியானாவில் 5 பேரும், மேற்கு வங்காளம், பஞ்சாபில் தலா 4 பேரும், கர்நாடகத்தில் 3 பேரும், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, சத்தீஷ்காரில் தலா 2 பேரும், சண்டிகார், மத்தியபிரதேசம், உத்தரகாண்டில் தலா ஒருவரும் தொற்றால் நேற்று இறந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்