அண்டை நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில்தான் சமையல் கியாஸ் விலை குறைவு - மத்திய அரசு
உலக அளவில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்தாலும் குறைந்த விலைக்கு சிலிண்டர் வினியோகம் செய்யப்படுவதாக மாநிலங்களவை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 14.2 கிலோகிராம் சிலிண்டரின் வீட்டு சமையல் எரிவாயு எல்பிஜி விலை 603 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதகவும், அண்டை நாடுகளின் விலைகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மலிவானது என்றும் பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், 'பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.603-க்கு வழங்கப்படுகிறது. அண்டை நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில்தான் கியாஸ் சிலிண்டர் விலை குறைவு.
பாகிஸ்தானில் ரூ.1,059.46-க்கும், இலங்கையில் ரூ.1,033.35-க்கும், நேபாளத்தில் ரூ.1,198.56-க்கும் கியாஸ் சிலிண்டர் விற்பனை ஆகிறது. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மத்திய அரசு பாதி விலையில் சிலிண்டர்களை கொடுக்கிறது. உலக அளவில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்தாலும் குறைந்த விலைக்கு சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தில் நாடு முழுவதும் 9 கோடியே 60 லட்சம் நுகர்வோர்கள் பயனாளிகளாக உள்ளனர்' என்று தெரிவித்தார்.
மேலும் சவுதி அரேபியாவில் எல்பிஜி விலை இரண்டு ஆண்டுகளில் டன்னுக்கு 415 அமெரிக்க டாலரிலிருந்து 700 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது, ஆனால் விலை உயர்வை மத்திய அரசாங்கம் உள்வாங்கிக் கொண்டுள்ளது என்று கூறினார்.