அந்தரகங்கை மலையில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டதால் பரபரப்பு
கோலார் தாலுகாவில் உள்ள அந்தரகங்கை மலை மீது சர்ச்சைக்குரிய வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.;
கோலார் தங்கவயல்
அந்தரகங்கை மலை
கோலார் (மாவட்டம்) தாலுகா பாபராஜனஹள்ளி கிராமத்தில் பிரசித்திபெற்ற அந்தரகங்கை மலை உள்ளது. இந்த மலை மீது பச்சை நிறத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தை புகழும் வகையில் ஓவியங்கள் வரைந்து சர்ச்சைக்குரிய வகையில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது.
மற்ற மதத்தவரை இழிவுபடுத்தும் வகையில் இது அமைந்திருந்தது. இது குறித்து கோலார் தாலுகாவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோலார் புறநகர் போலீசில் புகார் அளித்தனர்.
பரபரப்பு
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரச்சினைக்கு காரணமான பச்சை நிற ஓவியம் மற்றும் வாசகங்கள் மீது பெயிண்ட் அடித்து அழித்தனர்.
பிரச்சினைக்குரிய அந்த ஓவியங்களை வரைந்து, வாசகங்களை எழுதியது யார் என்று கண்டறிந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.