ராணுவ தளவாட உற்பத்தி தொடர்பாக ரூ.80 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து; பெங்களூரு மாநாட்டில் ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடந்தது

பெங்களூருவில், மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் ரூ.80 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாட உற்பத்தி தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

Update: 2023-02-15 21:10 GMT

பெங்களூரு:

ராணுவ உற்பத்தி

14-வது சர்வதேச விமான கண்காட்சியையொட்டி தொழில் அதிபர்கள், நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மாநாடு 'பந்தன்' என்ற பெயரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்த ஏரோ இந்தியா, இந்தியாவின் புதிய ராணுவத்தை வெளிப்படுத்தியுள்ளது. உள்நாட்டு ராணுவ உற்பத்தி தளவாடங்களை கொள்முதல் செய்ய பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ராணுவ உள்கட்டமைப்புகள், நவீனமயமாக்கலுக்கு ரூ.1.63 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தன்னிறைவு

ராணுவ தளவாடங்கள் இறக்குமதியை குறைக்கவும், பாதுகாப்பு துறையை பலப்படுத்தவும் இதுவரை இல்லாத வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிலம் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவு அடைவதன் மூலம் நமது பொருளாதாரமும் பலம் பெறும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

நமது நாடுகளின் தேவையை பூர்த்தி செய்வதுடன் நட்பு நாடுகளின் ராணுவ தேவைகளையும் நாம் பூர்த்தி செய்கிறோம். இந்த மாநாட்டில் ராணுவத்துறை தொடர்பாக 201 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடி ஆகும். இதன் மூலம் தற்சார்பு இந்தியாவின் புதிய யுகம் தொடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கர்நாடகம் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த விமான கண்காட்சியை நடத்த கர்நாடகத்தை விட சிறந்த இடம் வேறு இல்லை.

இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

இந்த மாநாட்டில் ரூ.80 ஆயிரம் கோடிக்கு எச்.ஏ.எல்., பி.எச்.இ.எல். உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட பல்வேறு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் இடையே 201 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்த மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முப்படைகளின் தலைமை தளபதி மனோஜ் பாண்டே, ராணுவ அதிகாரி அனில் சவுகான், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, கடற்படை தளபதி ஹரிகுமார் உள்பட ராணுவத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்