பெண் பயணிக்கு ரூ.2.36 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
விசா இல்லை என்று கூறி பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட பெண் பயணிக்கு ரூ.2.36 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிரிட்டீஷ் விமான நிறுவனத்திற்கு, பெங்களூரு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு:
விசா இல்லை என்று கூறி பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட பெண் பயணிக்கு ரூ.2.36 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிரிட்டீஷ் விமான நிறுவனத்திற்கு, பெங்களூரு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
விமானத்தில் ஏற்ற மறுப்பு
பெங்களூரு நாகரபாவி பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீலட்சுமி தனஞ்ஜெய்(வயது 43). இவர் கடந்த 2019-ம் ஆண்டு பார்சிலோனாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். இதனால் பெங்களூருவில் இருந்து பார்சிலோனாவுக்கு லண்டன் வழியாக விமானம் மூலம் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். இந்த நிலையில் லண்டன் செல்ல பெங்களூரு விமான நிலையத்திற்கு ஸ்ரீலட்சுமி வந்தார்.
அப்போது அவரிடம் இருந்த பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை பிரிட்டீஷ் விமான நிறுவன அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது ஸ்ரீலட்சுமியிடம் நேரடி விமான போக்குவரத்து விசா இல்லை என்று கூறி அவரை விமானத்தில் ஏற்ற அதிகாரிகள் மறுத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலட்சுமி தன்னிடம் செல்லுபடியாகும் ஆஸ்திரேலியா நாட்டு விசா இருப்பதாகவும், இந்த விசா இருப்பவர்களுக்கு நேரடி விமான போக்குவரத்து விசா வைத்திருப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் கூறினார்.
ரூ.2.36 லட்சம் இழப்பீடு
ஆனால் இதனை ஏற்க மறுத்த விமான நிறுவன அதிகாரிகள் ஸ்ரீலட்சுமியை விமானத்தில் ஏற விடாமல் திருப்பி அனுப்பினர். இதையடுத்து பெங்களூரு சாந்திநகரில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் பிரிட்டீஷ் விமான நிறுவனம் மீது ஸ்ரீலட்சுமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் மீதான விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில் இறுதி விசாரணை நடந்தது.
அப்போது விமான நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் நேரடி விமான போக்குவரத்து விசா இல்லாததால் ஸ்ரீலட்சுமிக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஸ்ரீலட்சுமிக்கு இழப்பீடு தொகையாக ரூ.1 லட்சம், வழக்கு செலவாக ரூ.15 ஆயிரம், டிக்கெட் கட்டணம் ரூ.46 ஆயிரம், பார்சிலோனாவில் மேற்கொள்ள இருந்த சுற்றுலா செலவு ரூ.75 ஆயிரம் என மொத்தம் ரூ.2.36 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கூறி விமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.