உத்தரகாண்ட் இடைத்தேர்தல்: பத்ரிநாத்தில் தோல்வியை சந்தித்த பா.ஜனதா

அயோத்தியை தொடர்ந்து பத்ரிநாத்திலும் ஆளும் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது.

Update: 2024-07-13 11:33 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதே போல மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாப்பில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. அதன்படி, 6 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதை தவிர 4 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஒரு தொகுதியை கைப்பற்றி உள்ள பா.ஜனதா, ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது.

இதனிடையே 13 சட்டப்பேரவை தொகுதிகளில் பெரும் கவனம் ஈர்த்த தொகுதியாக உத்தரகாண்டில் அமைந்துள்ள பத்ரிநாத் மாறி உள்ளது. அங்கு காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட லக்பத் சிங் புடோலா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்படி பத்ரிநாத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் லக்பத் சிங் புடோலா 28,161 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதாவின் ராஜேந்திர சிங் பண்டாரி 22,937 வாக்குகள் பெற்றுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டிலும் 2022-ம் ஆண்டிலும் பா.ஜனதா வேட்பாளரே இங்கு வெற்றி பெற்றிருந்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி பதவி வகித்து வருகிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தரகாண்டில் உள்ள 5 தொகுதிகளிலும் பா.ஜனதாவே வெற்றி பெற்றிருந்தது.

முன்னதாக மக்களவை தேர்தலில் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜனதா தோல்வியை சந்தித்த நிலையில், இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் பத்ரிநாத்திலும் படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்