'ராவணன்' என்று சொல்வதா? ஒரு குடும்பத்தை மகிழ்விக்க என்னை காங்கிரசார் திட்டுகிறார்கள் - பிரதமர் மோடி

ஒரு குடும்பத்தை மகிழ்விப்பதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் என்னை திட்டுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.;

Update:2022-12-01 21:54 IST

மேலிடத்துக்கு கட்டுப்பட்டவர்

குஜராத் சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ''பிரதமர் மோடி எல்லா தேர்தலிலும் என் முகத்தை பார்த்து ஓட்டு போடுங்கள் என்கிறார். அவர் என்ன ராவணன் போல் 100 தலை கொண்டவரா?'' என்று பேசி இருந்தார். அதற்கு பிரதமர் மோடி இன்று பதில் அளித்தார். குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டம் கலோல் நகரில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

மல்லிகார்ஜூன கார்கேவை நான் மதிக்கிறேன். ஆனால் அவர் கட்சி மேலிடத்துக்கு கட்டுப்பட வேண்டி இருக்கிறது. என்னை ராவணன் போன்றவர் என்று பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ராம பக்தர் மண்

ஆனால், குஜராத், ராம பக்தர்களின் மண் என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ளவில்லை. ராமர் வாழ்ந்ததையே ஏற்றுக்கொள்ளாதவர்கள், என்னை திட்டுவதற்காக, ராமாயணத்தில் இருந்து ராவணனை கொண்டு வந்துள்ளனர். இந்த வசைமொழிகளுக்காக, வருத்தம் கூட அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்திய பிரதமரை வசைபாட தங்களுக்கு எல்லா உரிமையும் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

இந்திய ஜனநாயகம் மீது கொண்ட விசுவாசத்துக்காக அவர்கள் என்னை வசைபாடவில்லை. ஒரு குடும்பத்தின் மீது உள்ள விசுவாசத்தால் திட்டுகிறார்கள். அவர்களை பொறுத்தவரை அந்த குடும்பம்தான் எல்லாம். அந்த குடும்பத்தை மகிழ்விப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். என்னை யார் மிக மோசமாக வசைபாடுவது என்பதில் காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே போட்டி நிலவுகிறது.

தாமரை மலரும்

ஒரு தலைவர், பாகிஸ்தானில் போய் என்னை திட்டினார். 'நாய் போல் சாவார்', 'ஹிட்லர் போல் சாவார்', 'வாய்ப்பு கிடைத்தால் மோடியை கொலை செய்வேன்' என்று எல்லா இழிமொழிகளையும் காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

நான் குஜராத் மக்களால் வளர்க்கப்பட்டவன். எனவே, அந்த வசை மொழிகள், குஜராத் மக்களை இழிவுபடுத்தும் செயல்.

இதற்காக காங்கிரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். ஓட்டு எந்திரத்தில் தாமரையை அழுத்தி, பாடம் கற்பியுங்கள். அவர்கள் சேறு வாரி வீச வீச தாமரை அதிகமாக மலரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திரவுபதி முர்முவுக்கு எதிராக போட்டி

குஜராத்தில், சோட்டாஉதப்பூர் மாவட்டம் போடலி நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஒரே விஷயத்தைத்தான் சொல்கிறது. 'வறுமையை ஒழிப்போம்' என்பதுதான் அது. அவர்களுக்கு மக்கள் ஆட்சியை கொடுத்தார்கள். ஆனால், அவர்கள் வறுமையை ஒழிக்கவில்லை.

கோஷம் எழுப்புவது, வாக்குறுதி அளிப்பது, மக்களை திசைதிருப்புவது ஆகியவைதான் அவர்களின் வேலை. அதனால்தான் அவர்களது ஆட்சியில் வறுமை அதிகரித்தது. அவர்கள் வங்கிகளை தேசியமயமாக்கிய போதிலும், ஏழைகள் வங்கிக்கணக்கு தொடங்க முடியவில்லை.

ஒரு பழங்குடியின பெண்மணி, ஜனாதிபதி ஆவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அதனால்தான், திரவுபதி முர்முவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது. இல்லாவிட்டால், திரவுபதி முர்மு, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இருப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்