பயங்கரவாதிகளை வளர்த்து அடைக்கலம் கொடுத்தது காங்கிரஸ்

பயங்கரவாதிகளை வளர்த்து அடைக்கலம் கொடுத்தது காங்கிரஸ் என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Update: 2023-05-05 21:13 GMT

பெங்களூரு:-

பிரதமர் மோடி பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. இதையொட்டி பிரதமர் மோடி கடந்த 29-ந் தேதி முதல் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் 29, 30-ந் தேதி பிரசாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி டெல்லி சென்ற அவர் மீண்டும் 2, 3-ந் தேதிகளில் அவர் கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அதைத்தொடர்ந்து 4-ந் தேதி டெல்லி சென்ற அவர், நேற்று அவர் மீண்டும் தனது பிரசாரத்தை கர்நாடகத்தில் தொடங்கியுள்ளார். அவர் வருகிற 7-ந் தேதி வரை கர்நாடகத்தில் சூறாவளி பிரசாரம் கொள்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பல்லாரிக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது:-

வயிற்று வலி

நாட்டில் கர்நாடகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது மிக முக்கியம். பயங்கரவாத செயல்கள் நடைபெறாமல் தடுப்பது முக்கியமானது. பயங்கரவாதத்திற்கு எதிராக பா.ஜனதா எப்போதும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் காங்கிரசுக்கு வயிற்று வலி வந்துவிடுகிறது.

பயங்கரவாத செயல்களால் ஒட்டுமொத்த உலகமே கவலைப்பட்டு வருகிறது. இந்தியா பல்வேறு காலக்கட்டங்களில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டது. பயங்கரவாத தாக்குதல்களால் நமது நாட்டின் ஏராளமான அப்பாவி மக்களை நாம் இழந்துள்ளோம். பயங்கரவாதம் மனித சமூகத்திற்கு, மனித பண்புகளுக்கு, வளர்ச்சிக்கு எதிரானது.

காங்கிரஸ் இழந்துவிட்டது

ஆனால் காங்கிரஸ் தனது வாக்கு வங்கி அரசியலுக்காக பயங்கரவாதத்திடம் சரண் அடைந்துள்ளது எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. பயங்கரவாத செயல்களால் இங்குள்ள தொழில்கள், தகவல் தொழில்நுட்ப துறை, வளமான கலாசாரம், பண்பாடு போன்றவை அழிந்துவிடும். பயங்கரவாதத்திற்கு எதிராக பேசும் தைரியத்தை காங்கிரஸ் இழந்துவிட்டது. மேலும் தனது சுயநலத்திற்காக பயங்கரவாதிகளை வளர்த்து அடைக்கலம் கொடுக்கிறது.

காலமாற்றத்துடன் பயங்கரவாதத்தின் இயற்கை தன்மையும் மாறி வருகிறது. கடத்தல், போதைப்பொருள் வணிகம், மதவெறி போன்றவை பயங்கரவாதத்துடன் தொடா்புடையது. கடந்த சில ஆண்டுகளில் வெடிகுண்டு, துப்பாக்கி சத்தம் உங்களின் காதுகளில் கேட்டிருக்கும். ஆனால் சமுதாயத்தை விழுங்கும் பயங்கரவாத சத்தம் எங்கும் ஒலிக்கவில்லை.

தி கேரளா ஸ்டோரி

கோர்ட்டுகளும் பயங்கரவாதத்தின் இயற்கை தன்மை குறித்து கவலையை தெரிவித்துள்ளன. 'தி கேரளா ஸ்டோரி' என்ற படம் ஒரு மாநிலத்தில் பயங்கரவாத வஞ்சக கொள்கைகள், சதிகள் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் அழகமான மாநிலமான கேரளாவில் மக்கள் கடுமையாக உழைக்க கூடியவர்கள், திறமையானவர்கள்.

இந்த படம் கேரளாவில் பயங்கரவாதிகளின் சதிகளை வெளியே கொண்டு வருகிறது. இத்தகைய பயங்கரவாத்தின் பக்கம் காங்கிரஸ் நிற்பது துரதிருஷ்டமானது. இந்த கட்சி நாட்டை அழிக்க பார்க்கிறது. காங்கிரஸ் பின்வாசலில் பயங்கரவாதிகளுடன் பேரம் பேசி அரசியல் ஆதாயம் பெற முயற்சி செய்கிறது. அதனால் காங்கிரஸ் கட்சியிடம் கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உள்நாட்டு போர்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஒரு ரூபாயை அனுப்பியால் அதில் 15 பைசா மட்டுமே மக்களுக்கு போய் சேருகிறது. அதனால் காங்கிரஸ் 85 சதவீத கமிஷன் கட்சி என்பதை அவரே ஒப்புக்கொண்டார். அந்த கட்சிக்கு இன்னும் 85 சதவீத கமிஷன் கட்சி என்ற அடையாளம் உள்ளது. சூடானில் உள்நாட்டு போர் நடக்கிறது. அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை 'ஆபரேஷன் காவேரி' என்ற பெயரில் மத்திய அரசு பத்திரமாக மீட்டு வருகிறது. இத்தகைய நெருக்கடியான நேரத்தில் கூட நமது நாட்டின் பக்கம் காங்கிரஸ் நிற்பது இல்லை.

அந்த நாட்டில் கர்நாடக மக்களும் பலா் சிக்கி தவித்தனர். அங்கு சிக்கிய இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளோம். இதில் அரசியல் செய்ய முயற்சி செய்த காங்கிரஸ் இந்த தேர்தலில் அதற்கான விலையை கொடுக்க வேண்டும். நெருக்கடி நேரத்தில் அரசியல் செய்த காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் ஏராளமான தவறான வாக்குறுதிகளை அளித்துள்ளன.

திருப்திப்படுத்தும் வாக்குறுதிகள்

அதில் ஒரு பிரிவை திருப்திப்படுத்தும் வாக்குறுதிகள் தான் உள்ளன. ஒரு அமைப்பை (பஜ்ரங்தள) தடை செய்வதாக கூறியுள்ளனர். இது தான் அவர்கள் அளிக்கும் முன்னுரிமையா?. காங்கிரஸ் கட்சி எத்தகைய அடிமட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை நாட்டு மக்களும், கர்நாடக மக்களுக்கு கவனித்து கொண்டு தான் இருக்கின்றன.

இவ்வாறு மோடி பேசினார்.

அவர் தனது உரையை முடிக்கும் நேரத்தில் 'ஜெய் பஜ்ரங்பலி' என்று மூன்று முறை முழக்கமிட்டார். அதைத்தொடர்ந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் துமகூருவுக்கு வந்தார். அங்கு நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.


Tags:    

மேலும் செய்திகள்