அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து 12 மணி நேர விசாரணைக்கு பின் ராகுல்காந்தி வெளியேறினார்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் 5வது நாளாக விசாரணை முடிந்து டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குனரகம் அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியேறினார்.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகளை யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றது என்பது அமலாக்கப் பிரிவு வழக்கு. இவ்வழக்கில் கடந்த வாரம் 3 நாட்கள், 30 மணிநேரத்துக்கும் மேலாக ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு காங்கிரஸ் தலைவர்கள் நாடு தழுவிய தொடர் போராட்டத்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று, தமது தாயார் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி ராகுல் காந்தி 3 நாட்கள் அவகாசம் கோரினார். பின்னர் நேற்று 4-வது நாளாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் ராகுல் காந்தி ஆஜரானார். ராகுலிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இன்று 5-வது நாளாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரானார் ராகுல் காந்தி. முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவிலும் நீடித்தது. பின்னர் இரவு 9 மணிக்கு இரவு உணவுக்காக ராகுல் காந்தி வீட்டுக்குச் சென்றார். அதன்பின்னர் மீண்டும் அமலாக்கப் பிரிவு அலுவலகம் சென்றார் ராகுல் காந்தி. இன்று இரவிலும் துருவி துருவி ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்தனர்.
இந்தநிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் 5வது நாளாக விசாரணைக்கு பின்பு டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குனரகம் (ED) அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 12 மணி விசாரணை முடிந்து அமலாக்க இயக்குனரக அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.