'விவிபாட்' எந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வலியுறுத்தல் - தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம்

இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டங்களில் 'விவிபாட்' எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

Update: 2024-01-02 22:24 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.அந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது. இதனால் புதிய நடைமுறையை தேவை. விவி பேட் (வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இது தொடர்பாக பல கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் எழுப்பி உள்ளதாகவும், இந்தியா கூட்டணி பிரதிநிதிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது என்றும் இந்தியா கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், 'விவிபாட்' எந்திரம் குறித்தான கருத்துகளை முன்வைக்க 'இந்தியா' கூட்டணி தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், "இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டங்களில் 'விவிபாட்' எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அந்த எந்திரம் குறித்து எங்களுக்குள் ஏற்பட்ட சந்தேகங்கள், நம்பகத்தன்மை குறித்து விவாதிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் நேரம் கேட்டு பலமுறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்தியா கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்